February 23, 2011

நம்பினார் கைவிடப்படார் (சோ-வின் எங்கே பிராமணன் பகுதியிலிருந்து தொகுக்கப்பட்டது)

ஐம்பத்தி ஒன்பது வயது பூர்த்தியாகி அறுபது துவங்கும் போது போது சஷ்டி-அப்த-பூர்த்தி செய்யப்படுகிறது. சாந்தி பூஜை செய்து ஹோமம் வளர்பது வழக்கம். அறுபது வயது துவங்கும் பொழுது, கிரஹ நிலைகள் ஏறக்குறைய பிறக்கும் பொழுது இருப்பது போல் இருக்கும் சாத்தியக்கூறுகள் இருப்பதால், ஷாந்தி செய்து கொள்வது விசேஷம் என கருதப்படுகிறது. ஹிந்து மதத்தில் சொல்லப்பட்டுள்ள சம்ஸ்காரங்களில் இது பற்றிய குறிப்பு இல்லாவிட்டாலும், ஷாந்தி, ஹோமம், பூஜை முதலியவை செய்யப்பட வேண்டிய விசேஷ தருணமாக சஷ்டி அப்த பூர்த்தி கருதப்படுகிறது. தற்போது திருக்கடையூர் என்ற ஸ்தலத்தில் சஷ்டியப்த பூர்த்தியை க்ரமப்படி செய்து கொள்ளும் தம்பதியர் பலர் உண்ட ஐம்பத்தி ஒன்பது வயது பூர்த்தியாகும் பொழுது "உக்ர ரத சாந்தி" செய்வதும், அறுபது முடியும் பொழுது "சஷ்டி அப்த பூர்த்தியும் செய்யப்படுவ தாவும் குறிப்பு இருக்கிறது. காலன் உக்ர ரதமேறி வருவதாகவும், அவனை சாந்தி செய்து குளிர்விப்பதாக ஐதீகம்.

இவற்றையெல்லாம் செய்தால் யமன் திருப்தி அடைவானா? இதெல்லாம் பகட்டுக்கென செய்யப்படும் அனாவசியங்கள் என்று அபிப்ராயம் இருந்தால் அதற்கேற்ற பலனே கிட்டும். எந்த ஒரு செயலின் விளைவு அதன் பால் உள்ள ஈடுபாட்டை பொருத்து அமையும். பக்தியும் நம்பிக்கையும் செயலின் ஊடே பின்னியிருந்தால் அந்த செயலின் மகத்துவம் தனித்து மிளிரும்.

யமனை வென்றவர்கள் ஒருவரும் இல்லை, குறைந்த பட்சம் மரண பயத்தை வென்றவர்களைக் கூட விரல் விட்டு எண்ணிவிடலாம். மரணத்தை வெல்ல முடியாவிட்டாலும், தர்ம தேவனான யமனிடம் போராடி வெற்றி பெற்றவர்களுள் மார்கண்டேயனும் ஒருவன். பதினாறே வயது நிரம்பியவனிடம் எத்தனை நம்பிக்கை / பக்தி இருந்தால், இறைவனே கதியென்று லிங்கத்தைக் கட்டிக்கொண்டிருப்பார்! அப்படிப்பட்ட பக்தி எத்தனை தூய்மையானதாக இருந்தால் சிவனும் லிங்கதினின்று தோன்றி யமனையே வதம் செய்திருப்பார்! மார்கண்டேயன் சிவபக்தனாக மட்டுமே இல்லாமல், இறையையின் அருவத்தை, தத்துவத்தை எல்லா உருவிலும் உணர்ந்த ஞானியாக திகழ்கிறான். விஷ்ணு பக்தனாய் விஷ்ணுவைப் போற்றுகிறான். விஷ்ணுவின் யோக மஹிமையைக் காண்கிறான். ப்ரளய காலத்தைக் காண்கிறான். காணுதற்கறிய பலவற்றை தன் யோகத்தாலும் பக்தியாலும் காண்கிறான். சிவனும் பார்வதியும் அவனுக்கு ப்ரளய காலத்தில் தரிசனம் தர,

"சத்துவ குணம் பொருந்தியவன் நீ
உலகை காத்து சுகமுறச் செய்கிறாய்
ரஜோ குணம் பொருந்தியவன் நீ
உலகத்தை படைபதற்காக அதைக் கொண்டவன் ஆகிறாய்
தமோ குணம் பொருந்தியவன் நீ
உலகத்தை அழிப்பதற்காக அதைக் கொள்கிறாய்"
என்று துதிக்கிறான்.

எல்லாபொருளிலும் எல்லா வடிவிலும், தன்னிலும் பிறவிலும் கூட 'ஒன்றை'யே காணும் பக்குவம் பெற்றாவனாகிய மார்கண்டேயன் தமக்கு பிரியமானவன் என்று அருளிச்செல்கிறார்.

நம்பிக்கையின் முக்கியத்துவத்தைப் பற்றி பேசப்படும் பிரபலக் கதை ஒன்று இதற்கு சாலப் பொருத்தமாக அமையும்.

கங்கையில் முங்கி எழுந்தால் கர்மம் (பாபம்) தொலையும் என்று நம்பியே அனைத்து மக்களும் புனித நதி நீராடுகின்றனர். ஒரு சமயம் பரமசிவன்-பார்வதி இடையே சம்பாஷணை நடந்தது. "கங்கையில் ஸ்னானம் செய்தால் பாபங்கள் கரைந்து போகுமே, ஏன் பூவுலக மக்களின் பாபங்கள் தீர்ந்ததாகவே தெரியவில்லை" என்று பார்வதி வினவ அதற்கு "நம்பிக்கையுடன் ஒருவனும் இங்கு ஸ்னானம் செய்தான் இல்லை" என்கிறார் இறைவன். அதனை நிரூபிக்க திருவிளையாடல் புரிகின்றார். வயோதிக வேடத்தில் சிவனும் இளைய மனைவியின் வேடத்தில் பார்வதியும் கங்கையில் நீராடுகின்றனர். முதியவரை கங்கை அடித்துச் செல்கிறது. என் புருஷனைக் காப்பாற்றுவார் இல்லையா என்று புலம்புகிறாள் அந்தப் பெண். அவ்வளவு சீக்கிரம் உதவவும் யாரும் முன்வரவில்லை. கடைசியில் சிலர் முன் வந்த போது "பாபமற்ற இவரை கரைசேர்ப்பவனும் பாபமற்றவனாக இருக்க வேண்டும் இல்லாவிட்டால் அவர்கள் சாம்பலாகி விடுவார்கள் " என்று நிபந்தனை விதிக்கிறாள் இளம் பெண். அனைவரும் தயங்கி வந்த வழியே சென்று விட, ஒருவர் கூட தூக்கி விட முன்வரவில்லை. இறுதியில் ஒரு இளைஞன் kகாப்பாற்றுகிறான். "நீ பாபமற்றவனா" என்ற கேள்விக்கு "அதிலென்ன சந்தேகம், கங்கையில் நீராடிய நிமித்தம் என் பாபங்கள் எல்லாம் கரைந்து விடுகின்றன, ஆகவே நான் பாபமற்றவன்" என்கிறான். இறைவனும் இறைவியும் அவனுக்கு அருள் புரிந்து விட்டு, "நம்பிக்கையோடு ஸ்னானம் செய்தால் மட்டுமே பாபங்கள் விலகும்" என்று திருவாய்மொழிவதாகக் கதை.

இந்து மதத்தில் சில நதிகளை புண்ய நதிகளாகக் கருதி தாய் வடிவில் உருவகப்படுத்தி வணங்கி வருகின்றனர். அங்கு நீராடுதல் அனைத்து பாபங்களையும் போக்க வல்லதாகவும் நம்பிக்கை நிலவுகிறது. முக்கியமானதாக எழு நதிகளை குறிப்பிடுவதுண்டு. கங்கை, யமுனை, ப்ரஹ்மபுத்ரா, நர்மதா, கோதாவரி, காவிரி, சரஸ்வதி ஆகிய ஏழும் சிறப்புற்றது. கங்கை நீராடுவதன் முக்கியத்துவத்தை நான் நிறைய கேட்டிருக்கிறோம். ஆனால் பலரும் அறியாத பெரும்சிறப்பு காவிரிக்கும் உள்ளது. நரகாசுரனை வதம் செய்த கண்ணனுக்கு வீர-ஹத்தி (வீரனை கொன்ற பாபம்) தோஷம் பீடித்தது. அதற்கு பரிகாரமாக காவிரியில் நீராடி பாபத்தை தொலைத்தாராம். துலா மாதத்தில் விடியல் நேரத்திலிருந்து இரண்டு மணி நேரம் வரிஅ, காவிரியில் அனைத்து புனித நதிகளும் சங்கமம் ஆகின்றன எனவே துலா ஸ்னானம் காவிரியில் செய்வது மிக உத்தமம். கங்கையில் மூன்று நாள் குளித்தால் கதி மோக்ஷம், யமுனையில் ஐந்து நாள் நீராட வேண்டும். காவிரியில் துலா ஸ்னானம் செய்தல், உடனே விஷ்ணு லோகத்திற்கு இட்டு செல்ல வல்லது என்று காவீரியின் மகிமையை எடுத்துரைக்கின்றனர் சான்றோர். அதுவும் துலா /ஐப்பசி மாதத்தில் மயிலாடுதுறைக் காவிரியில் நீராடுவது மிக்க சிறப்பு.

மயிலாடுதுறை என்ற மாயவரத்தில் மயூரநாதர் கோவில் ஸ்தல வரலாறு நாதசர்மா-அனவித்யா தம்பதிகள் இங்கு மோக்ஷம் அடைந்ததை நமக்கு எடுத்துறைக்கிறது. ஒரு சமயம் துலா மாதத்தின் கடைசி நாளிலும் காவிரியில் நீராட முடியாமல் போகவே நாதசர்மா-அனவித்யா தம்பதியர் மிகுந்த வருத்தத்திற்கு உள்ளாகின்றனர். அன்று கனவில் தோன்றிய சிவன், மறுநாள் காலை சூரிய உதயம் முன்பு நீராடினாலும் பாபம் நீங்கி மொக்ஷம் கிட்டும் என்று அருள்கிறார். அதன் படியே அதிகாலை நீராடி அத்தம்பதியர் ஈசனுடன் ஐக்கியம் ஆகின்றனர். இத்தம்பதிகளுக்காக வழக்கமான நேரத்தை முடக்கி வைத்ததால் இதனை "முடவன் முடக்கு" என்றும் வழங்குகின்றனர். இக்கோவிலில் இறைவியின் சன்னிதானத்திற்கு பக்கத்தில் அனவித்யாம்பிகை என்ற பெயரில் ஒரு சன்னிதி காணப்படுகிறது. நாதசர்மா ஐக்கியம் ஆன லிங்கம் அவரின் பெயரிலேயே இருக்கின்றது. இவையெல்லாம் நடந்ததற்கு தகுந்த சான்றாக, காசியில் இருக்கும் ஒரு கல்வெட்டில் கூட இத்தம்பதியைப் பற்றிய குறிப்பு இருக்கிறது.

2 comments: