January 26, 2011

தெய்வ குணம் (சோவின் எங்கே பிராமணன் தொகுப்பிலிருந்து)

செயலின் விளைவுகள் கர்மயோகியை கட்டுப்படுத்துவதில்லை என்று படித்தோம். கேட்டோம். உணர்ந்தோம். ஆயினும் அதன்படி நடக்க ஏறக்குறைய நம்மில் பலரால் இயலுவதில்லை. அஹம் கட்டுப்படுத்தபடாததால், அது கட்டுண்டு உடம்பினுள் உழலும் இந்த ஜீவன் மட்டுமே 'நான் என்ற நினைப்பில் செயல்களை செய்கிறது. செயலுக்குறிய விளைவும் இலக்குக்குறியவனை மட்டுமின்றி, செய்தவனையும் பாதிக்கிறது. இத்துடன் நின்றுவிடுவதில்லை. ஒவ்வொரு செயலுக்கும் தொடர் விளைவுகள் தொடர்ந்தவண்ணம் இருக்கிறது.

வீட்டில் சண்டையிட்டு வந்த முதலாளி தன் இயலாமையின் வெளிப்பாடை கோபத்தின் மூலமாக வேலையாளிடம் காண்பிக்கிறான் என்பது நகைச்சுவை துணுக்காக மட்டுமின்றி மனோவியல் விதிப்படியும் சரியாகிறது. சிறு செயல் முதல் பெரிய மகத்தான செயல்கள் வரை அனைத்திற்கும் விளைவுகள் உண்டு. அடி முடி அறியமுடியாத படி விளைவுகள் நடைமுறை வாழ்வில் பின்னிப்பிணைந்திருக்கிறது. தனிப்பட்ட ஒரு மனிதனின் நிலைமைக்கு காரணம் இன்னார் அல்லது இன்ன செயல் என கூறிவிடுகிறோமே தவிர, அவனின் செயலுக்கோ நிலைமைக்கோ, புரிந்தும் புரியாததுமாய் பல பிரபஞ்ச தொடர் நிகழ்ச்சிகளும் காரணம் ஆகின்றன. அவரவர் வினைப்பயன் என்றும் இதை சொல்லக் கேட்கிறோம். நன்மை பயக்கும் ஒருவரின் செயல் நம்மை மகிழ்ச்சியில் ஆழ்த்தும் பொழுது, சில நேரம் நன்றி நவில்கிறோம், பல நேரம் மறந்தும் விடுகிறோம். அதே நேரத்தில் நமக்கு கேடு விளைவிக்கும் வண்ணம் நடைபெறும் செயல்களை நம்மால் மன்னிக்க முடிவதில்லை. ஒவ்வாத செயல்களை செய்தவனை 'வினை-விதைத்தவன்' என்ற நோக்க்கத்துடனேயே அணுகுவதால், அவனிடம் பெரும்பாலும் அன்பு துளிர்ப்பதில்லை. செயல்கள் அனைத்துமே தொடர் நிகழ்ச்சிகளின் பிரதிபலிப்பே, அதுவும் நம் விதிக்கு உட்பட்டே நடைபெறுகிறது என்ற தெள்வு பிறந்தால் எவ்வித மனக் கசப்பும் பிற ஒருவரிடம் ஏற்படுவதில்லை. அப்படியே ஒருவன் தீங்கு இழைத்தாலும் அதை மன்னிக்கும் பக்குவம் வந்துவிடும்.

தவறிழைப்பது மனித இயல்பாகவே இருந்தாலும், அதனை பெருந்தன்மையோடு மறப்பதும் மன்னிப்பதும் தெய்வ குணமாகவே கருதப்படுகிறது. மன்னிக்க முடியாத குற்றம் ஒருவன் புரிந்து விட்டால் அவன் கதி என்ன? அப்படிப் பட்ட கொடும் செயலும் மன்னிக்கப்பட்டு விட வேண்டுமா? எதைத் தான் மன்னிப்பது என்ற வரையறை வகுக்கப்பட வேண்டுமா? இவ்விஷயத்தை குறித்த சர்ச்சை மஹாபாரத்தத்தில் த்ரௌபதி-யுதிஷ்டிரர் இடையே எழுகிறது. "எப்படிப்பட்ட தவறை எவர் செய்திருப்பினும் மன்னிக்கும் குணம் க்ஷத்திரிய லக்ஷணமே அல்ல" என்று வாதிடுகிறான் பீமன். "எதையும் எப்பொழுதும் மன்னிக்கும் குணமுடைய ஒருவன் அரசாண்டால், மக்களும், மற்றவரும் அவனை எளிதாக மதிப்பிட்டு விடக் கூடுமாகிறது. பிரஹலாதன் தன் பேரன் மஹாபலியின் சந்தேகத்தை போக்கும் பொருட்டு, ராஜ குணம் பொருந்தி அரசாள்பவனின் நிலை எவ்வாறு இருக்க வேண்டும் என்று விளக்குகிறான். எதையும் எப்பொழுதும் எளிதில் ஜீரணித்து மன்னித்து விடுபவனை மற்றோரும், உற்றோரும் ஏன் பணியாட்களும் கூட ஒரு பொருட்டாய் மதிப்பதில்லை என்று ப்ரஹ்லாதன் கூறுகிறான்" என்று எடுத்துக்காட்டுகிறாள் த்ரௌபதி. ஒருவன் தெரியாமல் தவறிழைத்தால் அவன் மன்னிக்கப்படவேண்டியவன். தவறினை சுட்டிக்காட்டி மன்னிக்கவேண்டியதே தர்மம். இரண்டாம் முறையும் அவன் தவறிழைத்தால் அவன் தண்டனைக்கு உரியவனே என்று வாதிடுகிறாள்.

அதற்கு பொறுமையின் இருப்பிடமாம் தர்ம புத்திரரின் விடை அவரின் முதிர்ச்சி நிலைக்கு எடுத்துக்காட்டாய் அமைகிறது. "மன்னிப்பே உலகத்தில் சிறந்ததும், மேன்மையானதும், கீர்த்தியளிக்க வல்லதும் ஆகும். அதை விட சிறந்த மேன்மையான விஷயம் இன்னொன்றில்லை. ஒவ்வொருவரும் பதிலுக்கு பதில் விரோதமும் பேச்சும் வளர்த்து விட்டுக்கொண்டிருந்தால், அது முடிவற்று நீண்டு கொண்டே இருக்கும். எந்த ஒரு விரோதமும் முடிவுக்கு வர மன்னிப்பும் பொறுமையும் அவசியம். மன்னிக்கும் செயல் பிரம்மத்துக்கு ஈடானது. அதுவே சத்தியம்."
இப்படி ஒரு பதில் அளிக்க எப்பேர்பட்ட பரந்த மனம் படைத்திருக்க வேண்டும்!

'தவறிழைப்பது மனித குணம். அதை மன்னிப்பது தெய்வ குணம்!'

January 21, 2011

நாம ஸ்மரணம் (சோ-வின் எங்கே பிராமணன் தொகுப்பிலிருந்து)


கர்ம சன்யாசம் யோகம் பற்றி தனி அத்தியாயமே கீதையில் இருக்கிறது. செயல்களின் பலனை துறந்தவனே உண்மையான கர்ம யோகி. அப்படிப்பட்டவன் பரிபூர்ண உள்ளார்ந்த பக்தியில் திளைக்கிறான். இன்ப துன்பங்கள் அற்று விடுவதில்லை, அவற்றை சமமாக பாவிக்கும் மன நிலையை பெறுகிறான். 'ஸ்தித ப்ரக்ஞன்' நிலையில் இருந்து கொண்டு செயல்களை செய்கிறான்.

சர்வ தர்மான் பரித்யஜ்ய மாம் ஏகம் ஷரணம் வ்ரஜ
அஹம் த்வா சர்வ பாபேப்யோ மோக்ஷயிஷ்யாமி மா ஷூச

"எல்லா தர்மங்களையும் அதன் பலங்களையும் விட்டு விட்டு என் ஒருவனையே ஷரணம் என்று பற்று வைத்தவனை நான் எல்லா பாபங்களிலினின்றும் விடுவிக்கிறேன். வருந்தாதே" என்று ஆறுதல் அளிக்கிறான் பகவான். எல்லா தர்மங்களை என்றால் செயல் செய்வதை விட்டுவிடுவது என்று பொருள் கொள்வதல்ல. செயலின் பலன்களை விட்டு விடுவதே வலியுறுத்தப்படுகிறது. தர்மமோ, சாஸ்திரமோ சம்பிரதாயமோ விதியோ அப்படிபட்ட கர்ம யோகியை ஒன்றும் செய்வதில்லை. சட்டையைப் போன்ற இந்த உடம்பின் பால் உள்ள பற்றும் அதன் பொருட்டு வரும் பிணைப்புகளையும் பிரித்துணர்ந்து, கர்மயோகியாய் வாழ்பவனை கர்மங்கள் பற்றுவதில்லை. கண்ணபரின் பக்தி சாதாரணன் பார்வைக்கு தர்மங்களை விட்டு விலகியே இருந்தது. தர்மத்தின் வழியைத் தாண்டி ஆறாய் பெருக்கெடுத்து ஓடிய அவர் பக்தி, கர்மங்களினின்று அப்பாற்பட்டு நின்றது. இறைவனுக்கு மாமிசத்தை உணவாக படைத்து, தன் உமிழ் நீரால் அபிஷேகம் செய்து, தன் தலை பூவையே அர்சித்த பக்தர். இறைவனின் கண்ணில் இரத்தம் வழிவதைக் கண்டு, சாமான்ய பக்தனைப் போல் பரிதவிக்காமல், பதற்றம் கொள்ளாமல், தர்மம் அதர்மம் என யோசிக்காமல், தாமதிக்காது தன் கண்ணையே பெயர்த்து கொடுத்து கண்ணப்பன் ஆனார். க்ரமமாகவும் சாஸ்திர சம்பிரதாயதுடனும் செய்யும் பக்தனைக் காட்டிலும் உயர்ந்து நின்றார். வேட்டையாடி திரிந்த அவருக்கு சிவபக்தி ஆட்கொண்டதும், பக்தியின் உச்சத்தை எட்டி பிடித்தது எல்லாமும் மொத்தமுமாக ஆறே நாட்களில் நிகழ்ந்ததாக பெரிய புராணம் கூறுகிறது. இறைவனை விட்டு க்ஷண நேரம் அகல மனமில்லாத உயர்ந்த பக்தி கொண்டிருந்தார். இவர்களை கர்மங்கள் பீடிப்பதில்லை. ஏனெனில் பலன் பற்றி எண்ணமே அற்று இருக்கிறது இப்படிப்பட்டவ்ர்களின் செயல்கள்.


"உன்னால் யோகியாக கர்மங்களை செய்ய முடியாவிட்டாலும், ஞானியின் நிலையில், இரட்டைகள் அற்று தன்னையே எங்கும் எதிலும் காண்பவனாக உயர முடியாவிட்டாலும், மாறாத பக்தி செலுத்தும் பக்தனாக இல்லாவிட்டலும் கூட இறைவனை அடைய ஒரு வழி இருக்கிறது" என்கிறது கீதை. "மேலும் கடைசி தருணத்தில் ஒருவன் இறக்கும் தருவாயிலேனும் என் நாமத்தை ஸ்மரித்தால் அவன் என்னையே வந்தடைகிறான்" என சந்தேகத்திற்கு இடமின்றி நம்மை தெள்விக்கிறான் கண்ணன்.

அந்தகாலே ச மாம் ஏவ ஸ்மரன் முக்த்வா கலேவரம்
ய: ப்ரயாதி ஸ மத்பாவம் யாதி நாஸ்த்யத்ர ஸம்சய:
- பகவத்கீதை

இறக்கும் தருவாயிலாவது இறைவனைப் பற்றிய ஒரு நொடி நினைப்பே போதுமானது. இறுதியில் அவன் இறைவன் அடி சேர்கிறான். பாபங்கள் செய்த ஒருவன் இறக்கும் தருவாயில் இறைவன் நாமத்தை சொன்னால் அவன் நற்கதி அடைவது எவ்வாறு சாத்தியம்? என்று ஐயம் தோன்ற சாத்தியம் உண்டு. பாகவதம் விளக்கும் கதையின் சாரம் இறைவனின் திருநாமத்தின் பெருமைக்கு சிறந்த எடுத்துக்காட்டு.

அஜாமலன் எனும் பக்தன் தான தர்மங்கள் புரிந்து நல்வாழ்கை நடத்தி வந்தான். நங்கையின் பால் காதல் கொண்டு இல்லறம் புகுந்த பின், இல்லற சுகத்தில் தன்னையே மறந்து, நற்காரியங்கள் செய்வதும், பக்தி செய்வதும் கூட குறைந்து விடுகிறது. இப்படியே வாழ்நாள் முழுவதும் கழித்த அவன், இறக்கும் தருவாயில் "நாராயணா" என்று தன் மகனை கூப்பிடும் தருணத்தில் உயிர் பிரிகிறது. அப்பொழுதும் அவன் பகவானை நினைத்தவன் இல்லை. அவனை இட்டுச் செல்ல யமனின் கிங்கரர்கள் வருகிறார்கள், அவர்களை அப்புறம் போகச் சொல்லி, விஷ்ணு தூதர்கள் அவனை விஷ்ணு லோகம் இட்டு செல்கிறார்கள். இறைவன் சிந்தனை அற்று இருந்த போதும், நாராயணன் நாமத்தை இறக்கும் தருவாயில் உச்சரித்ததற்கு அத்தனை பலன்! இதில் நினைவில் கொள்ள வேண்டிய விஷயம் ஒன்றே ஒன்று உள்ளது. இறக்கும் தருவாயில் எவனுக்கு இறைவன் நினைவு வரும்? குறைந்த பட்சம் இறைவன் நாமத்தை உரைக்கும் பாக்கியம் எவனுக்கு கிட்டும் என்றால், எவன் ஒருவன் அதிக நேரம் இறை பக்தியில் ஈடுபட்டுள்ளானோ அப்படிப்பட்டவனுக்குத் தான் தன்னை மறந்த நிலையிலும் கூட, நினைவிலும், கனவிலும் கூட இறைவன் நினைவும், தியானமும் அல்லது அவன் நாமமும் உச்சரிக்கும் எண்ணம் வரும்.

மனிதனைப் போல சாமர்த்தியசாலிகள் காண்பதரிது. சிவன் வரம் கொடுக்க எத்தனிக்கும் போதெல்லாம், மூப்பும் சாகாவரமும் பெறவதற்கு பலவாறாக யோசித்து சாமர்த்தியமாய் வரம் கேட்பதும், அப்படியும் கூட எப்பேர்பட்டவனுக்கும் மரணம் சம்பவிப்பதும் நமக்கு தெரிந்ததே. இறக்கும் தருவாயில் எப்படிபப்ட்ட சூழ்நிலையில் நாம் சிக்கியிருப்போம் என்று சொல்ல முடியாது. நினைவிழந்து இருக்கலாம். உறக்கத்தில் அமிழ்ந்து விடலாம், சாவின் பயம் பற்றிக்கொண்டு பரிதவிப்போடு இருக்கலாம், பாசப் பிணைப்பில் பக்கத்தில் பந்துக்களின் முகம் பார்த்துக்கொண்டு கட்டுண்டு இருக்கலாம். இதில் எத்தனை பேர் இறைவனை நினைக்கவோ, அல்லது பேயரை உச்சரிக்கவோ செய்கின்றனர்? நம்மைப் போன்றோரின் சார்பாக பெரியாழ்வார் இறைவனை முன்னமே வேண்டுகிறார்.

"இறக்கும் நேரம் நான் வியாதியில் வீழ்ந்து விட்டால் அங்கு உன்னை நினையேனோ மாட்டேனோ, ஆதலால் நாராயணா, அப்போதைக்கு இப்போதே உன் பெயரை சொல்லி வைத்தேன், நீ கணக்கில் வைத்துக்கொள்" என்று நம்மைப் போன்ற சாதார்ணர்களுக்காகவே சிறப்பு மிக்க இப்பாடலை இயற்றியுள்ளார்.

எய்ப்பு என்னை வந்து நலியும்போது அங்கு ஏதும் நானுன்னை நினைக்க மாட்டேன்
அப்போதைக்கு இப்போதே சொல்லிவைத்தேன் அரங்கத் தரவணைப் பள்ளியானே!
- பெரியாழ்வார்

அந்த மஹானுக்கு நன்றி கூறி, மேலே கூறிய வரிகளைக் நினைவு கூர்ந்து, அப்போதைக்கு இப்போதே சொல்லி வைத்து, இறைவனை தினமும் வணங்குவோம்.

January 20, 2011

பஞ்சதந்திர கதைகள் (சோவின் எங்கே பிராமணன் தொகுப்பிலிருந்து)

நம்மில் சிலருக்கு இறைவன் இருக்கின்றானா என்றே சந்தேகம் வருகின்றது. கண்ணுக்கு புலப்படாத வஸ்து என்பதால் நம்புவது சாத்தியமாவதில்லை. மேலும், நமக்கு சாதகமான காரியம் நடைபெறாவிட்டால், கோபம் கொண்டு இறைவனை சந்தேகிக்கிறோம். உலகில் நடைபெறும் பல அதர்மங்களும் கொடூரங்களும் இன்னல்களும் வக்ரங்களும் பல்கிவிட்ட நிலையில் சந்தேகம் இன்னும் வலுவடைகிறது. இறைவன் என்ற தத்துவமோ, அல்லது எதுவுமோ கூட, நம்பினாலேயொழிய நமக்கு கிட்டுவதில்லை. சந்தேகம் என்பது நம்மை சாதிக்க விடாது செய்யும் வியாதி. சந்தேகம் எவர் மீது விழுந்தாலும், நம் திறமை மீதே அமைந்துவிட்டாலும் கூட அதனால் பாதகமே அதிகம் விளைகிறது. நம்பத் தகுந்த விஷயங்களை நம்புவதால், சாதாரண நம்பிக்கை தாண்டிய, "பரிபூரணமாக" நம்பிக்கை வைப்பதால் அரிய விஷயங்களை கிடைக்கப் பெறலாம். விஞ்ஞானிகளின் கண்டுபிடிப்புகள் பலவும், நாம் நம்ப மறுத்த ஒன்றை அவர்கள் நம்பியதால் நிகழ்ந்த வினோதங்கள்.

"சந்தேகம் கேட்டையே விளைவிக்கும்" என்ற கருத்தை வலியுறுத்த பீஷ்மரும் யுதிஷ்டிரரருக்கு சிறு கதையின் மூலம் படிப்பிக்கிறார்.

காட்டில் ஒரு நரி, சிறந்த நற்குணங்களும், தர்ம சிந்தனையும், ஒப்பற்ற அறிவும் கூடியதாய் வாழ்ந்து வருகிறது. மற்ற மிருகங்களுக்கும் படிப்பினை போதிக்கிறது. "ஒருவனின் குணம் அவன் இருக்கும் இடத்தை பொருத்து அமைவதில்லை. அவனின் அறிவும் மனமுமே நிர்ணயிக்கிறது. ஒரு ஆசிரமத்தில் கொலை நிகழ்ந்துவிட்டதால், ஆசிரமம் புனிதம் என்பதால், கொலை பாபம் வந்து சேராது இருக்குமா?" என்றெல்லாம் வியாக்கியானம் செய்கிறது. இதனை கேட்ட புலி மிகவும் புகழ்ந்து நரிக்கு அமைச்சர் பதவியை வழங்குகிறது. நரி முதலில் மறுக்கிறது "ஸ்திரமற்ற ராஜாவின் புத்தி, பின்னாளில் சந்தேகத்தின் பேரில் மாறக்கூடும், எனக்கு பதவி வேண்டாம்" என்கிறது. புலியோ நரியை போல் அறிவாளியை கண்டதில்லை, சந்தேகத்துக்கு இடமின்றி நரி அமைச்சர் பதவியை ஏற்கவேண்டும் என்று வற்புறுத்த நரி பதவி ஏற்கிறது.

நாளடைவில் மற்ற மிருகங்கள் நரியிடத்து பொறாமை கொண்டு அதன் பேரில் பொய்யாய் களங்கம் கற்பிக்கின்றனர். புலி அதனை நம்பி கோபம் கொள்கிறது. நரியோ, அமைதியாய், "உன் குணம் சந்தேகத்திற்கு உட்பட்டது என்று தெரியும்" என்று அமைதியாய் பதவியை விட்டு அகல்கிறது. புலி பின்னர் உண்மை உணர்ந்து தன் தவறை நொந்து மன்னிப்புக் கேட்டும், நரி மீண்டும் பதவி ஏற்க மறுத்து புலிக்கு நல்லாசி கூறி புத்திமதி வழங்கிவிட்டு, மற்ற மிருகங்களை விட்டு ஒதுங்கி தவ வாழ்கையை மேற்கொள்கிறது.
பஞ்சதந்திரக் கதையைப் போலவே இருக்கும் இக்கதையின் மூலம் பொறாமை என்னும் அழுக்கை களைவது சுலமபல்ல என்று புரிகிறது.

* கெட்ட நடத்தையுடையவன் நல்லவனை பார்த்து பொறாமை கொள்கிறான்.
* முட்டாள் பண்டிதனை பார்த்து பொறாமை கொள்கிறான்.
* இல்லாதவனுக்கு இருப்பவனிடத்து பொறாமை.

அழுக்காறு என்று சொல்லப்படும் ஒழிக்கவேண்டிய ஆறு அடிப்படை குணங்களின் (காமம், க்ரோதம், மோஹம், லோபம், மதம், மாத்ஸர்யம்) வேறுபட்ட வெளிப்பாடே பொறாமை. பொறாமையினால் தெளிந்த சிந்தை குழம்பி மனவருத்தமும் விரோதமும் வளர்கிறது. தெரிந்தோ தெரியாமலோ நம் நட்பு கொள்ளும் நபருடன், "கடும்" விரோதம் வளர்ந்து விட்டால் அதை இனி தொடர்வது உசிதமா என்ற யுதிஷ்டிரரின் கேள்விக்கும் பீஷ்மர் பதில் அளிக்கிறார்.

ஒரு ராஜாவின் அரண்மணையில் விசேஷ ஞானம் பொருந்திய குருவியும் அவருடன் நட்புடன் பாராட்டியபடி வளர்ந்து வருகிறது. நாளடைவில் ராஜாவிற்கு மகன் பிறக்கிறான். குருவிக்கும் குஞ்சு பிறக்கிறது. இளவரசனும் இளம் குருவியும் அவர்கள் பெற்றோரைப் போலவே நட்பு பாராட்டி விளையாடி வருகின்றனர். ஒரு சமயம், அவசர புத்தி காரணமாக குருவிக் குஞ்சுவின் கழுத்தை நெரித்து, இளவரசன் கொன்று விடுகிறான். கடும் கோபம் கொண்ட குருவி, இளவரசனின் இரு கண்ணையும் நோண்டி புண்படுத்திவிடுகிறது. முதலில் ராஜா கோபம் கொண்டு வெகுண்டாலும், தவறு இளவரசன் பேரிலும் இருப்பதால் குருவியை மன்னித்து விடுகிறார். குருவி வேறு இடம் பறந்து செல்ல எத்தனிக்கிறது. ராஜாவோ இரு சாராரும் மறந்து, மன்னித்து விடுவொம், அதனால் இங்கேயே தங்கிவிடு என்று கூறுகிறார். அதனை மறுத்து குருவி, "கடும் விரோதம் வளர்ந்த இடத்தில், இருப்பது உசிதம் அல்ல. சில தீங்குகள் எளிதில் மன்னிக்கப்படுவதும் இல்லை. அதன் பாதிப்பு அடங்குவதும் இல்லை. ஒருவரை ஒருவர் அடிக்கடி சந்தித்தால் மனக் கசப்பும் வருத்தமும் மேலிடும், அத்தகைய உறவில் சுமூகம் இருப்பதில்லை. எனவே என்னை போகவிடு" என்று சொல்லி பறந்து விட்டது.
விரோதத்தை மன்னித்து விடுவதே உசிதம் என்றாலும் கூட எப்படிப்பட்ட விரோதம் என்பதை ஆராய்ந்து உறவின் பலமோ முறிவோ ஏற்படுகிறது.

January 18, 2011

ஆடுகளத்தில் வென்ற வெற்றிமாறன் (திரைப்பார்வை)



வட்டார மொழியில் முங்கி முத்தெடுக்க தெரியாதவர்களுக்கு படத்தை ரசிப்பது கடினம். ரசிப்பதென்பது பெருந்தூரம், படத்தின் மையக் கதை புரிவதே பெரும்பாடு. இப்படியெல்லாம் அவசரப்பட்டு நினைத்ததென்னவோ உண்மை. சத்தியமாக வட்டார மொழி புரியவில்லை. "சேவல்"ஐ "சாவல்" என்று குறிப்பிடுகிறார்கள் என்று ஏறக்குறைய முக்கால் மணி கழித்தே புரிந்தது. மொழியால் அந்நியப்படுத்திய போதும், கதை சொல்லும் விதத்தில் கட்டிப் போடுவது பாராட்டுக்குறிய திறன்.

முதல் ஒரு மணிநேரத்திற்கு கால், வால். தலை, மூக்கு என புரியாமல் பிய்ந்து, தொங்கும் கதையை, அழகான ஒவியமாக அடுத்த பாதியில் முடித்துக் கொடுக்கிறார். Rustic-rural story என்றால் காத தூரம் ஓடும் நகர்புற மக்களையும் கட்டி இழுப்பதற்கு அசாத்ய திறமை வேண்டும். சொல்லப்பட்ட கதையோ நமக்கு புரியாத விளையாட்டுத் துறையைப் பற்றியது. அதற்கென ஒரு பாரம்பர்யம், பயிற்சி எல்லாம் இருப்பதே பலருக்கு தெரிந்திருக்க வாய்பில்லை. களத்துமேட்டுக் காதல் கதை, அண்ணன் தங்கச்சி பாசம், ஊர் வன்முறை என தெரிந்த கோணங்களில் படம் பண்ணியிருந்தால் commercial hit. இது போன்ற அபூர்வ கதைக்கருவுக்கு மெருகூட்டி, அது சொல்லப்பட்ட விதத்தில் புது பரிமாணம் காட்டி, வெல்வதென்பது திறமை மட்டுமல்ல துணிச்சலான செயலும் கூட.

தனுஷ் என்ற நடிகனை பாராட்டியே ஆக வேண்டும். பத்தோடு பதினொன்றாக இதுவும் ஒரு படம் என்று, படம் பண்ணுவதே இல்லை. பஞ்ச் டயலாக் பேசி பஞ்சாய் பறந்து அடிக்காமல் யதார்த்த கதைகளில் அதற்கெனவே படைக்கப்பட்ட "Guy next door" முகததை பயன்படுத்தி நம்முடன் இயல்பாக ஒன்றிவிடுகிறார். போக வெண்டிய தூரத்தை கணக்கிட்டு தரமான வித்தியாசமான கதைகளும் தன் நடிப்புத் திறனை வெளிப்படுத்தும் பாத்திரங்களும் தேர்ந்தெடுத்து வெற்றி நடை போடுவது நிஜம். வாழ்த்துவோம்.

காதல் என்பதைச் சுற்றி கதை நடைபெறவில்லை. அது ஒரு அத்தியாயமாக பின்னப்பட்டிருக்கிறது. அந்த அத்தியாத்திற்கு தேர்ந்தெடுத்த நடிகை தன் பங்கை செவ்வனே செய்திருந்த போதும், ஜி.வி.ப்ரகாஷ் பாடல்களால் மனதை இதமாக ஒற்றி எடுத்த போதும், காதல் சொல்லப்பட்ட விதத்தில் ஒரு மொழம் பூவை தாராளமாக காதில் சுற்றியிருக்கிறார்கள். காதலுக்கு கண்ணு இல்லை என்பதெல்லாம் அந்தக் காலம். இந்தப் படத்தின் காதலுக்கு அறிவே இல்லை. அதனால் தான் அதற்குப் பெயர் காதலோ என்னவோ!!

படத்தில் வரும் கதாபாத்திரங்கள் அனைவரும் தம் பங்கை கச்சிதமாகச் செய்திருக்கிறார்கள். கதை இப்படித் தான் நகரப் போகிறது என்று நம்மால் யூகிக்க முடியாத அளவு twist கொடுத்திருப்பதில் தான் கதையின் வெற்றி சிம்மாசமிட்டு அமர்ந்திருக்கிறது. மொழி புரியாத போது சற்றே ஆறுதலாக நம்மை உட்கார்த்துவது ராதாரவியின் பரிச்சயமான குரல். இறுதி வரை, நம்மை கட்டிப்போடுவதில் அக்குரலுக்கும் பங்குண்டு. எல்லாவற்றிற்கும் மேலாக, யதார்த்தம் என்ற பெயரில், வெட்டு, குத்து, ரத்தக்களறி, மனநிலைகுன்றிய மனிதர்களின் வலி இப்படி படம் பண்ணி, நம் வாழ்வில் எஞ்சியிருக்கும் கொஞ்ச நஞ்சசந்தோஷத்தையும் திரையரங்கில் பறிகொடுக்காமல் பண்ணியிருப்பதற்கு இயக்குனர் இரண்டு கைதட்டல் அதிகம் வாங்குகிறார்.

கதையின் சுருக்கம்: மனித மனம், அதன் போக்கு, அது சந்திக்கும் ஏமாற்றங்கள், வெற்றிகள், அதனால் அது செய்யும் செயல்பாடு எதுவும் கணிக்க முடியாதது. அதுவே ரத்தவெறி பிடித்து அலைய வல்லது. மனிதச் சேவல்களை ஏவி வேடிக்கைப் பார்க்கும் god father. Very crisp presentation.

இப்படத்தை,
வேறு மாதிரி நகர்த்தியிருந்தால் - சுமாரான படம்
வேறு மாதிரி முடித்திருந்தால் - வழக்கமான படம்
இப்படி நகர்த்தி இவ்வனே முடித்துள்ளதால் - விருது வாங்கத் தகுந்த படம்.

Story telling is an art. Approach towards story telling = crowing glory.

படத்தின் மெருகு - தனுஷ்
படத்தின் அழகு - யதார்த்தம்
படத்தின் வெற்றி - கதை / கதைக் களம் / இயக்கம் / வெற்றி மாறன்.

தனுஷ் உட்பட எல்லா கலைஞர்களையும் தாண்டி வெற்றிமாறன் தனியாக மிளிர்கிறார். திரைத்துறையின் ஆடுகளத்தில் நம்பிக்கை நட்சத்திரமாக ஒளி வீசுகிறார் அடுத்தடுத்து பல திறமையான ஆட்டத்தை எதிர்பார்ப்போம்.

ஹனுமன் ( ( சோ-வின் எங்கே பிராமணன் பகுதி 2ல் இருந்து)



ஹனுமனை இறையம்சமாக வழிபடும் பக்தர்கள் பலர். ஆலயங்களின் அருகாமையில் அல்லது ஆலய வழிபாட்டுக்கு செல்லும் பொழுது குரங்குகள் கண்ணில் பட்டாலும் அனுமன் அம்சம் என்று பயபக்தியோடு நினைத்துக்கொள்பவர்களும் உண்டு. பெரும்பாலும் அப்போது நமக்கு இருக்கும் மனநிலையே இதற்கு காரணம். மற்ற காட்டுக் குரங்குகளுக்கோ அல்லது மற்ற நேரத்தில் தென்படும் குரங்குகளுக்கு அந்த மரியாதை கிடைப்பதில்லை. கேள்வி இங்கே என்னவென்றால், அனுமனோ, வாலி, சுக்ரீவர் கூட்டதவர்களோ (சற்றே அறிவு முதிர்ச்சி எய்திய) குரங்குகளா? பரிணாம நிலையில் அறிவு முதிர்ச்சி எய்திய குரங்கு மனிதனுக்கு முதல் கட்ட நிலை.


இங்கு கூறப்படும் சுக்ரீவ வாலிகள் குரங்கினின வரிசைகளின் பரிணாம வளர்ச்சியை கடந்த நிலையில் இருப்பதைப் படித்து தெரிந்து கொள்கிறோம். சுக்ரீவன் வாலி போன்றோர் மெத்தப் படித்தவர்கள். அவர்கள் பராக்ரமமும், அறிவு முதிர்ச்சியும், சிந்தனையும் மனிதனுக்கு ஒப்பாக கருதக்கூடியது. பலவித சாஸ்திரங்கள் அறிந்தவர்கள் எனவும், அவர்களால் கட்டப்பட்ட கட்டிடங்களும் அரண்மணைகளும் அற்புதமென வியக்கும் வண்ணம் அமைந்திருந்ததாக இதிஹாச வரலாறு எடுத்துரைக்கிறது. இவர்களை "வானரங்கள்" என்று கூறுவதே முறையாம். வானரங்களை பொதுவாக குரங்குகள் என்றே நாம் நினைத்தாலும், ராமாயணம் நடந்தது த்ரேதா யுகத்தில், அந்த யுகத்தில் வானரர்களும் இத்துணை மெத்த அறிவுடையவர்களாக இருந்திருக்கின்றனர். சாதாரண குரங்குகள் என்று நினைத்து விடாமல், அவர்களை வானரங்கள் என்று விசேஷமாய் பிரித்துப் பார்ப்பதே தகும்.

மேலும் ஜாம்பவான் ஹனுமனின் பராக்ரமத்தை எடுத்துரைக்கையில் "ஹனுமனே நீ சாமான்யன் அல்ல, ராம லக்ஷ்மணர்களுக்கு சமமான தேஜஸைப் பெற்றவன்" என்கிறார். ஹனுமன் வாயு பகவானுக்கு அஞ்சனைக்கும் பிறந்தவர். ஹனுமன் புகழுரைக்கும் வாயு பகவான், "ஹனுமன் பெரிய வீரன், சிறந்த அறிவாளி, எனக்கு நிகரானவன்" என்று வாய்மொழிகிறார்.

ஹனுமனை வணங்கும் ஸ்லோகம்:


"அசாத்யம் சாதக ஸ்வாமின்
அசாத்யம் தவ கிம் வத
ராம தூத க்ருபா சிந்தோ
மத் கார்யம் சாதய ப்ரபோ"

"சாத்யம் மீறிய அரிய செயல்களை செய்யும் இறைவனே, உங்களுக்கு செய்ய முடியாததென ஏதேனும் உண்டோ?! ராமனின் தூதனே கருணை கொண்டு என் கார்யத்தை சாதிக்க அருள் புரியுங்கள் ப்ரபோ" என்பது தோராயமான அர்த்தம்.

January 04, 2011

(குட்டிக் குட்டி கிறுக்கல்கள் - 6 )

ஆக்கம்
______



ஆற்றல் பயன்பட ஆவதெல்லாம் நன்று
சீற்றம் கொண்டு சீவிச் சாய்க்காத
அழிவின் பாதையில் இட்டுச் செல்லாத
மானுடம் மலர நன்மைகள் சிறக்க
தேக்கம் கொள்ளாமல் தொடர்ந்து பெருக்கெடுத்து
அயராது சிந்தித்து தளராது செயல்பட்டு
ஆக்கத் துறைகளுக்கே ஊக்கம் தரும்
உயர்வாற்றாலை மட்டுமே பெருமைப் படுத்துவோம்.