March 04, 2010

சன்னியாசம் அவசியமா? (சோவின் - எங்கே பிராமணன் இரண்டாம் பாகம்)

பெற்றவர்களின் சம்மதம் பெற்று சன்னியாசம் கொள்வதே முறை என்றாலும், ஆதிஷங்கரரின் தாயார் உட்பட எவருமே மனம் விரும்பி, மகிழ்வுடன் விடைகொடுக்கவில்லை. பேருக்கு சம்மதம் சொன்னவர்களும், வற்புறுத்தலின் பேரில் சம்மதம் சொன்னவர்களுமே அதிகம். இவ்வண்ணம் பெற்றோரையெல்லாம் புண்படுத்தி, வருத்ததில் ஆழ்த்தியானும் ஞானத்தைப் பெற வேண்டுமா?

இக்கேள்வியை சற்றே வேறு விதமாய் ஆராயலாம். நம் பிள்ளைகளுக்கு ஒரு துறையில் பிடிப்போ, ஆர்வமோ இருக்கிறது என்று வைத்துக்கொள்வோம், இன்றைக்கெல்லாம் அவர்களின் உரிமையை நாம் தடுக்கிறோமா? அல்லது வெளிநாடு சென்று படித்துத் திரும்பவோ, அங்கேயே வேற்றுநாட்டு பிரஜையாகிவிட்டு தம் வருமானத்தையும், வாழ்க்கையை அமைத்துக்கொள்ளவோ நாம் சுதந்திரத்தை பறிக்கிறோமா? குறிப்பிட்ட ஒருவனுக்கு எதில் ஆர்வம் இருக்கிறதோ, அதன் படி செல்லுதல் அவனின் தனிப்பட்ட உரிமை. அதைத் தடுக்க பெற்றோரே இன்று முன்வருவதில்லை. உலகாய விஷயங்களுக்கும் கல்விக்குமே இப்படியென்றால், உயர்ந்த படிப்பை, ஞானத்தை தேடிப் போகிற ஒருவனுக்கு அந்த உரிமை வழங்கப்பட வேண்டியது அவசியமாகிறதல்லவா?

பெற்ற மனம் தவித்தாலும், அழுதாலும் கூட தனிப்பட்ட இன்னொருவனின் ஆன்ம தாகத்தை, பிறப்பின் நோக்கத்தை, அதன் தொடர்புடைய தேடலை தடை போடுவது என்பது பெரும்பாலோரும் செய்யமாட்டாத ஒன்று. பிறப்பின் நோக்கத்தை நிறைவேற்றுவதும் ஞானவழி முயல்வதும் உயர்ந்த கடமைகள். அவற்றை தடைபோடுவதோ ஆன்ம தாகத்திற்கு தடை விதிப்பதோ, பெருக்கெடுத்து ஓடும் ஆற்றை கைகளால் தடுப்பது போல.

தான் கண்டுணர்ந்த ஞானத்தை யக்ஞவல்க்யரிடம் தெளிய முற்படும் போது, 'மாதா பிதா குரு'வின் ஆசியுடன் என் பதிலை கூறத்துவங்குகிறேன் என்கிறார் ஜனகர். ஆகவே மூவரின் ஆசியும் தேவையானது. மூவரின் ஆசியுடன் இலக்கை நோக்கி அடி எடுத்து வைக்க வேண்டும். ஞானத்தின் தேடலுக்கு வீடோ, வீட்டிலிருக்கும் நபர்களோ, உறவுகளோ வழி-உபயம், விடை சொல்ல இயலாது. அதற்கு குரு வேண்டும்.

ஆன்ம வழி தொடரும் சீடனுக்கு பிக்ஷை கொடுப்பவர்கள் தாய்மார்கள். குரு தந்தை, சிஷ்யர்கள் பிள்ளைகள், அவன் அனுபவிக்கும் ஏகாந்த சுகமே இல்லறத் துணை. ஞானப் பாதையில் போகின்றவனுக்கு பந்தமும் சொந்தமும் பற்றும், பழுத்த பழம் மரத்தில் தங்காது நிலத்தில் விழுவது போல் அறுத்துக் கொண்டு விழுந்துவிடும். தேசிகனாகிய குருவே- திசையைக் காட்டுபவரே ஷரணம் எனச் செல்கிறான்.

2 comments:

  1. இதில் உங்கள் கருத்தையும் add செய்கிறீர்களா, இல்லை அந்த நிகழ்ச்சியின் சுருக்கத்தை.. தருகிறீர்களா?

    ReplyDelete
  2. தொடர் வருகைக்கு மிக்க நன்றி அஷோக்.

    சொல்லப்படும் கதைகள், சான்றுகளையொட்டிய செய்திகள் பகிர்வுகள் அனைத்தும் தொடரில் சொல்லப்பட்டவை. Not to just state facts but to make it as an article, கோர்வையாக எழுதுவதற்காக நடுவே சில வாக்கியங்கள் நானும் சேர்த்துள்ளேன்.
    அது தொடரில் சொல்லப்பட்ட கருத்தையொட்டியும் அமையும், சில நேரங்களில் சில பதிவுகளில் என் சொந்த கருத்தும் கூட.

    இப்பதிவில்,

    //இக்கேள்வியை சற்றே வேறு விதமாய் ஆராயலாம். நம் பிள்ளைகளுக்கு ஒரு துறையில் பிடிப்போ, ஆர்வமோ இருக்கிறது என்று வைத்துக்கொள்வோம், இன்றைக்கெல்லாம் அவர்களின் உரிமையை நாம் தடுக்கிறோமா?//

    இதெல்லாம் தொடரில் சொல்லப்பட்ட செய்திகளை self analyse செய்த போது எனக்கு தோன்றிய என் சொந்த கருத்துக்கள்.

    ReplyDelete