December 14, 2009

சோ-வின் எங்கே பிராமணன் part1 ( ஜாதிகள் இல்லையடி பாப்பா)



திருமலை நள்ளான் சக்கரவர்த்தி என்று வைணவத்தில் ஒரு பகுதியினர் உண்டு. அதன் தோற்றத்தின் காரணம், வைணவர் ஒருவர் கீழ் ஜாதியினர் ஒருவரின் இறுதிக் கடனை முன்னின்று தாம் நடத்த, அதன் பின் தோன்றிய கிளை தான். இப்பகுதியினர். இந்திய அரசியல் வரலாற்றில் தம் தடத்தை பதித்த, இன்றைக்கும் நாம் மரியாதையுடன் நினைந்து மகிழும் சி. ராஜகோபாலாச்சாரி எனும் ராஜாஜி இவ்வழித் தோன்றலே. அவரின் இராமாயண மஹாபாரத மொழிப்பெயர்ப்புகள் இன்றும் தமிழில் முன்னிடத்தில் விளங்கி வருகிறது.

ஜாதிகளைத் தாண்டிய மனித நேயத்தின் அடிப்படையில் எல்லோரும் ஒர் குலம், எல்லோரும் ஒன்றே என்பதை வலியுறுத்த கண்ணப்ப நாயனார் கதைகள் முதல் பல கதைகளில் இறைவன் நேரே உணர்த்தியதும், குறிப்பாலுணர்த்தியதும் உண்டு. அப்படிப்பட்ட கதை தான் பெரிய நம்பியின் கதை.

மாறநேர நம்பி என்பவர் தாழ்ந்த குலத்தில் பிறந்தவர். பெரிய நம்பி உயர்குலத்தோன். மாறநேரியின் இறப்பிற்கு பெரிய நம்பி ஈமக் கடன்களை செய்தார். அதனால் அவர் தம் ஜாதியிலிருந்து விலக்கப்பட்டு கடுமையாய் நடத்தப்பட்டார். அவர் இருக்கும் தெருவழியே ரங்கநாதரின் தேர்வீதி உலா வந்து கொண்டிருந்தது. அது பெரியநம்பியின் தெருவிலும் வலம் வந்து கொண்டிருந்தது. அப்பொழுது பெரியநம்பியின் பெண், அத்தூழையம்மை அவர் மனையின் வீசப்பட்டிருந்த முட்செடிகளையெல்லாம் கடந்து வந்து, ரங்கநாதரின் தேர் முன் விழுந்து, 'ஜாதிபேதங்களையெல்லாம் கடந்தவன் நீ, மாடு மேய்க்கும் குலத்தோரை சமமாய் நடத்தியவன் நீ. உன் போலவே ஜாதிபேதங்களை பாராத நடந்த எங்களுக்கு நிகழும் அநீதிக்கு ஒரு தீர்ப்பு சொல்லாது இந்த தேர் இங்கிருந்து நகராது' என ஆணையிட்டு கதறுகிறாள். அதன் பின், எவ்வளவு பேர் வலிந்து இழுத்தும், போராடியும் தேர் நகர மறுக்கிறது. தம் தவறை உணர்ந்து, பெரிய நம்பியை அர்ச்சகர் தோளில் சுமந்து கொண்டு தேரில் அமர்த்திய பின்னரே தேர் நகர்ந்ததாக சரித்திரம் கூறுகிறது. ।


அப்படியெனில் சாஸ்திர சம்பிரதாயங்களே வேண்டாமே, எல்லாவற்றையும் தளர்த்தி விடலாம், அது தான் எழுச்சி, அது தான் மறுமலர்ச்சி என பேசுவதும் தேவையற்து। ஜாதிக்கட்டுப்பாடுகளும், ஒழுக்கங்களும், சாஸ்திர சம்பிரதாயங்களும் தேவை தான். எல்லாமே தளர்த்தி விட்டால், பின்ஒழுக்கம் கட்டுப்பாடு தளர்ந்து மனிதன் 'எப்படியும் வாழலாம்' என்ற நிலைக்கு தள்ளப்பட்டுவிடுவான்.இப்படிப்பட்ட கட்டுப்பாடுகளெல்லாம் ஒழுக்கத்திற்காகவும், வழிவகுக்கும் பொருட்டும், அர்த்தமுள்ளதாக படைக்கப்பட்ட ஒன்று. அதை மீறுவது சிறந்ததன்று. "எல்லோரும் மனித ஜாதி" என்ற நிலை, மனதால் பிறரை வித்தியாசமின்றி நடத்தும் நிலை, பலருக்கு சரி வருவதில்லை. அது ஞானமார்கத்தின் பால் செல்லும் மனிதர்களுக்கு சொல்லப்பட்டது. அந்த நிலையில் இல்லாத ஒருவர் அப்படிப்பட்ட சிந்தனையை புகுத்திக்கொண்டு ஒழுக்கக்கட்டுப்பாடுகளை தளர்த்திக்கொள்ளுதல் வாழும் வகைக்கு ஊறு விளைவிக்கும்.

எனினும் ஜாதியும் மதமும் மனிதனை நல்வழிப்படுத்தவும், வாழ்வை சீராக அமைக்கவும் உருவாக்கப்பட்டது என்பதை நினவில் கொண்டு, தேவையான பொழுது சில ஜாதிகோட்பாடுகளுக்கு வளைந்து கொடுப்பதில் தவறில்லை. மனிதநேயத்தின் முன் ஜாதி மத கோட்பாடுகள் தளர்ந்து விடுவது இயற்கை.

No comments:

Post a Comment