April 09, 2009

பாடுறேன் மெதுவா...உறங்கு

விழித்திருந்த இரவுகள்
தொலைப்பேசி துவாரத்தில் பரிமாறிய கனவுகள்
ரகசியமாய் பாடிப் பகிர்ந்த பாடல்
தொடர்ந்த உருவான ஊடல்
மூன்றாம் ஜாமத்திலும் முடியாக்கதைகள்
பொட்டுறக்கமின்றித் துவங்கிய காலைப்பொழுதுகள்
இனியேனும் ஓய்வு வேண்டும்
நாள் பார்த்து நலங்கிட்டு நம் உறவுக்கு பெயரிட்டு
என்றென்றும் உனதாகிவிட்ட நிம்மதியில்
இரவெனும் பகலெனும் பாராத ஆழ்ந்த உறக்கம்

April 07, 2009

காதல் - கத்திரிக்காய் (mann)



இதோ இப்பொழுதுதான் சோனி டிவியில் விடிய விடிய, ஆறிப் போன 'மன்' (mann) படம் பார்த்து, அதன் பாதிப்பை இங்கு எழுதிக்கொண்டிருக்கிறேன்.

ஆங்காங்கே இந்தப் படத்தில் (படமே தழுவல்) சுட்ட தழுவல்கள் பற்றி உபரியாய் தகவல்களும் கொடுத்தனர். எஸ்.ஏ ராஜ்குமாரின், படப்பாடல் ஒன்றும் தழுவப்பட்டிருக்கிறது. 1957ல் ரிலீசான 'An affair to remember' என்ற ஆங்கிலப்படத்தின் அப்பட்டமான (இந்தியத்தன) தழுவல். 1957களில் பேசப்பட்ட படம் தான் என்றாலும் அது இந்த அளவு அஜீரணம் ஏற்படுத்தியுள்ளது என்பது இதன் இந்தியத்தழுவலால் வந்த வினை. எந்த ஒரு அருமையான ஆங்கிலப்படமும் இந்தியப்படுத்தாமல் இருப்பது சிறந்தது. இன்னும் 50 வருடம் கழித்து நம்மூரில் TITANIC எடுக்கப் போகிறார்களோ என பயமாய் உள்ளது.


படம் முழுக்க காதலுக்கு அழகான(!) விளக்கங்கள. ஒரு வேளை 18 வயதில் பார்த்திருந்தால் அடடே காதல் என்பது இது தான் என்று வக்காலத்து வாங்கியிருக்கலாம். அடிக்கடி 'சச்சி ப்யார்' (உண்மை காதல்) என்ற வசனம் வேறு எரிச்சலூட்டுகிறது.


மணமாகப் போகும், ஒருத்தியும் ஒருவனும், அவரவர்கள் முறையே திருமணம் செய்து கொள்ளவிருந்தவர்களை தடாலடியாய் மறந்து விட்டு, ஒருவரை ஒருவர் கண்டதும் மோதி, பிறகு காதல் கொள்கிறார்கள்। அப்பொழுது, இவனை நினைத்து வேறொருத்தியும், அவளை நினைத்து வேறொருவனும் காத்திருக்கிறார்களே... அவர்களுக்கு 'டிமிக்கி' கொடுப்பது என்னவாயிற்று!


இன்னொரு விஷயம் நெருடுகிறது. இதுவே மணமான இருவருக்கு, அட... அவர்களே திருமணம் செய்து கொண்டு ஒரு இரண்டு மாதம் கழித்து சந்தித்திருந்தார்கள் எனில், அது bigamy! ஆக சச்சி ப்யாருக்கும் bigamy க்கும் வெறும் ஒரு இரண்டு மாத கால அவகாசம் தான் வித்தியாசம்! கல்யாணம் ஆகிய பின் வேறொருவன் மூலமாக சச்சி ப்யாரை கண்டு கொண்டால் அவர்கள் கதி என்ன? என்ற விளங்கங்களுக்கு வேறொரு படம் எடுப்பார்களா?


அது எப்படிங்க, காதல் படங்களில் பலவற்றில் இருவரும் தனித்து பயணிக்கும் போது மட்டும் lift நின்றுவிடுகிறது? அவர்கள் வழிந்து, மேலே விழுந்து புரண்டு என ஒரு 15 நிமிடம் அவகாசம் கொடுத்துப் பிறகு மெதுவாய் திறக்கிறது। ஒவ்வொரு இளம் ஆணும் பெண்ணும் சத்தியமாய் liftக்கு கோவிலே கட்ட வேண்டும்.


ஹீரோயினுக்கு கால் ஊனமாகிவிடுவது பரிதாபமான விஷயம். ஆனால், அநியாயம் என்னவென்றால், "எக்காரணத்தை கொண்டும் அவனுக்கு உண்மை தெரியவே கூடாது" என்று வெறித்தனமாக மறைக்கும் ஹீரோயின், கடைசி சீனில் ஹீரோவே தட்டுத்தடுமாறி இவளைக் கண்டுபிடித்து, கால் போய்விட்டது என்று கண்டு கொண்டு, "உனக்குக் காலாய் நான் இருக்கிறேன்" என்று சொன்னவுடன் பஞ்சாய் இளகிவிடுகிறாள்! "எனக்கு உன்னை விட்டும், உனக்கு என்னை விட்டும் இருக்க முடியுமா?" என்றதும் "முடியாது!! இது சச்சி ப்யார்(! அந்த வார்த்தையே கடுப்பா இருக்குங்க!)" என்று சொல்வது மெய் சிலிர்க்க வைக்கிறது!!!


காதலன், ராப்பகலாய் உழைக்கிறான். அவனது கலைஓவியங்களை விற்று, குத்துமதிப்பாய் நாம் ஒரு 40 வருடத்தில் சம்பாதிப்பதை ஆறே மாதத்தில் சாதித்து, அவன் பணக்காரனாகி விடுகிறான்.(Ah! if only life was that easy!) சிண்ட்ரெல்லா கதை போல், ஒரு மாயை உண்டு பண்ணுகிறார்கள் காதல் எனும் பெயரில்.


மனிஷா கொய்ராலா, ஆமிர்கான் நன்றாய் நடித்துள்ளனர். பாவம் அனில் கபூர், அவளின் ex காதலனாய் வருகிறார்.அவர் மட்டும் காதலை உடனே விட்டுக்கொடுத்து விடுகிறார். அது சச்சி ப்யார் இல்லையல்லவா!!


பதினெட்டு வயது மதிக்கத்தக்கவர்கள் இப்படத்தைப் பார்த்தால் காதல் போதை ஏறும். அவ்வயதைத் தாண்டி வந்ததால், காதல் பிதற்றலை விட யதார்த்தப் பிதற்றல்களே நமக்குச் சரியாய்படுகிறது. இத்தனையும் தாண்டி சில இடங்களில் சில காதல் வசனங்களை ரசிக்க முடிகிறது.(அவரவர் MATURITY பொறுத்து). நிறைய மனிதர்களுக்கு சிண்ரெல்லா போன்ற கதைகளின் மேல், குழந்தைத்தனமான குதூகலமும் நம்பிக்கையும் எத்தனை வயதானாலும் ஓய்வதில்லை. அதனாலேயே இது போன்ற படங்கள் ஓடி விடுகிறது.


நிஜ வாழ்வில் யதார்த்தத்தை ஏற்றுக்கொண்டு, 'உன்னோடு நான் கழித்த பொழுதுகள், இனிமை. நீங்கா நினைவோடு, உனக்காக உன் சந்தோஷத்துகாக இறைவனைப் பிரார்த்திப்பேன்' என்று பிரியும் காதலர்களே அதிகம்.

அவர்கள் இதயத்துள் இருப்பது தான் 'சச்சி-ப்யார்'

எதிரி (திரைப்பட அலசல்)

எச்சரிக்கை: இது எப்பொழுதோ வெளியாகிய "எதிரி" என்னும் வரலாற்று மிக்க சிறப்புப் படத்திற்கு எப்பொழுதோ எழுதிய அலசல். படம் சரியாக ஓட, ஏன் தத்தி தத்தி கூட நடக்கவில்லை. இப்பதிவின் ஒரே ஆறுதல் மாதவனின் நிழற்படம் :P

________________________________________________________________



'ஆஹா, மாதவன் படம் பார்க்காமல் இருப்பதா?' என்ற அவருக்காக மட்டுமே படம் பார்த்த பிரஜைகளுள் நானும் ஒருத்தி. இதற்குத்தான் Star value என்று சொல்வார்கள் போலும்। ஸ்டார் வேல்யூவுக்கு வேட்டு வைக்கும் படம்.


ஆரம்பகால கலாட்டக்களுக்கும் கலகலப்புக்கும் முழுப் பொறுப்பு விவேக். கொழுந்து விட்டு எரியும் எரிச்சலை கொஞ்சம் தணிக்கிறார். கனிகா சிக்கென்று அழகாய்த்தான் இருக்கிறார். முதலில் அவர் தான் ஹீரோயின் என்பது போல் ஒரு பில்டப். சளைக்காமல் காமெடிக்கு கைகொடுத்திருக்கும் டில்லி கணேஷ் பரவாயில்லை. ஜெயிலில் இருந்து வெளிவரும் பொழுது, கோழை போல் வசனம் பேசுகிறார் மாதவன். அதனால் இந்தக் காரெக்டர் 'துப்பறியும் சாம்பு' போல் எசகுபிசகாய் ஏதோ செய்து பெயர் வாங்கிகொள்ளும் பாத்திரம் என்னும் மாயையைத் தோற்றுவிக்கிறது.

'ஆஹா! நானா? குண்டனா? அடிதடிக்கும் எனக்கும் என்ன சம்மந்தம்?' என்று பூனை போல் முகத்தை வைத்துக்கொண்டு, பிறகு கனிகாவிற்காக ரௌடிகளுடன் புகுந்து விளாசுவது, படம் பார்க்கும் எல்லோரும் பூ சுற்றிக்கொண்டிருப்பவர்கள் என்ற நினைப்புடன் படம் பண்ணியதைக் காட்டுகிறது.

ரொம்ப சுவாரஸ்யமாய் போகிறது என்று சொல்ல முடியாவிட்டாலும், ஏதோ பரவாயில்லை என்று போகிறது முதல் பாதி. யார் சதா? ஏன் தற்கொலை செய்து கொள்கிறார்? அட ஆள்மாறாட்டங்கள் வேறயா? ஏதோ சுவாரஸ்யக் கதையோ? என்று நினைக்கத் தொடங்கும் பொழுது இடைவேளை வந்து விடுகிறது.

இடைவேளை வரை கதாநாயகிக்கு முக்கியத்துவம் கொடுக்கப்படாதது வித்தியாசமான ஒரு எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது. மாதவனும் சதாவும் காதல் என்கிற வட்டத்துக்குள் ரொம்ப தாமதமாய் நுழைகிறார்கள். கடைசியில் பெயர் குழப்பம் காரணமாய் மாதவனை ஏதோ பெரிய ரௌடி என்று போலீஸ் இழுத்துக்கொண்டு போவது நம்பும்படியாய் இல்லை. பெரிய-சிறிய ரௌடிகளின் 'புகைப்பட-நகல்' எல்லாம் வைத்துக்கொண்டிருக்க மாட்டார்களா என்று மறுபடியும் லாஜிக் எதிர்பார்த்து செல்லும் பலரை, தட்டி உசுப்பி, தமிழ் படங்களின் உண்மை நிலையை செவிட்டில் அறைகிறது.

சதாவைப் பற்றி சொல்லிக்கொள்ள ஒன்றும் இல்லை.ரஹ்மானின் அந்தக் கால விசிறிகள் பலர் துக்கபடுவர். அவருக்கு வில்லன் வேடம் பொருந்தவில்ல.'அநாயசமாக ஒரு பொறுப்புள்ள அதிகாரி சுட்டுக்கொல்ல முடியுமா?' என்னும் புத்திசாலித்தனமான கேள்விகளுக்கு, முன்பே சொன்னது போல் இடமில்லை.அடிபட்டு ஜெயிலில் இருக்கும் மாதவனுக்கு 'மேக்கப்' சிறிது சிரமம் எடுத்து செய்தது பாராட்டத்தக்கது.

முணுமுணுக்கிற அளவு கூட எந்த பாட்டும் இல்லை. ஹரிஹரன், ஷங்கர் மஹாதேவன் என்று பலரின் குரல் இருந்தும் எடுபடவில்லை.

படம் முடியும் சமயம் வரை, விட்டுக்கொடுக்காமல், கதையில் பயங்கர திருப்பம் வரவிருக்கிறது என்று நம்மை நாமே ஏமாற்றிக் கொண்டே இருந்தால்..., படமும் முடிந்து, சுபம் போட்டு விடுகிறார்கள்! (அடப்போங்கப்பா! )

இன்னும் பலமான கதையை எதிர்பார்த்த நாம் 'எதிரி'; நல்ல கதைகள் படம் பண்ணுபவர் என்ற இமேஜை கெடுத்த கே.எஸ்.ஆர். 'எதிரி'; இளம் ரசிக-ரசிகைகளை ஏமாற்றிய மாதவன் 'எதிரி'; டப்பா ம்யூசிக் போட்ட யுவன் சங்கர் ராஜா 'எதிரி'. இப்படி இந்தப் படத்துக்கு நிறைய எதிரிகள்!

April 04, 2009

திருவண்ணாமலைப் பயணம் (நிறைவுப் பகுதி)

கிரிவலம்


'திருவண்ணாமலை போய்ட்டு கிரி வலம் போகாம வருவாளோ? கட்டாயம் போய்ட்டு வரணம்' என்று பல நலம்விரும்பிகள் கூறியதன் பெயரில் மறு நாள் கிரிவலம் செல்லத் தீர்மானித்தோம்। மொத்தம் பதினாலு கிலோமிட்டர் நடை. 'திருப்பதியெல்லாம் முனகாமல் நடந்திருக்கேன், இது வெறும் ப்ளேயின்ஸ் தானே, ரொம்ப ஈஸி' என்று பெருமையடித்துக்கொண்டேன். 'அப்போ நீயே குழந்தையையும் தூக்கிண்டு நடந்துடு' என்றார் என் கணவர். உண்மை உறைக்க, என்ன செய்வது என்று தெரியாமல் விழித்தோம். 'பேசாம என் ஃப்ரெண்ட் ஷைலஜா சொன்ன மாதிரி, யாரானும் 'கிரி'ன்னு ஒரு ஆளை நிக்க வெச்சு, பிரதக்ஷணம் பண்ணிடலாம்' என்று பெரியதாய் ஜோக் அடித்ததை என் கணவர் ரசிக்கவில்லை.


கிரி என்றால் மலை.இந்த மலையில் பல சித்தர்கள் வாழ்ந்து வருவதாய்க் கூறுகிறார்கள். மூலிகைகள் மண்டிக்கிடக்க, அதை வலம் வருதல், உடலுக்கும், உள்ளத்துக்கும் ஆரோக்கியம் பயக்கும். வேறு வழியின்றி, கடைசியில், காரிலேயே கிரிவலம் வரத் தீர்மானித்தோம். மறுநாள் காலை 'மனசே ரிலாக்ஸ்' ஒலி நாடாவை எடுத்துக் கொண்டு, கார் சகிதம் எங்கள் கிரிவலம் துவங்கியது.


கிரிவலம் வரும் பாதையில் சற்றே உள்ளடங்கி 'அடி அண்ணாமலை' கோவில் உள்ளது। உள்ளடங்கி இருப்பதாலேயே, அதிக ஆளரவம் இல்லாமல் அமைதியாக இருக்கிறது. பத்து நிமிடம் கோவிலில் இருந்து விட்டு, மீண்டும் கிரிவலம் தொடர்ந்தோம். மலைவலம் வரும் பாதையில் பலர் பயண மூட்டையுடன் வலம் வந்து கொண்டிருந்தனர். எங்கள் காரின் கேசட்டில் இப்பொழுது தம்பதியர் ஒற்றுமையாய் வாழ்வதைப் பற்றி சுகபோதாநந்தாவின் போதனைகள் முழங்கிக்கொண்டிருந்தது. கேட்டுக்கொண்டே கடவுளைப்பற்றியும், இன்ன பிற நல்ல விஷயங்களைப் பற்றியும் பேசிக்கொண்டு பயணித்திருந்தோம். எது எப்பொழுது எங்கே துவங்கும் என்றே தெரியாது. ஆதிபகவனான முழுமுதற் கடவுள், ஆதி அறியாதவன் என்றால், நாம் (குறிப்பாக கணவன்-மனைவி) துவங்கும் கருத்துவேறுபாட்டுத் தர்க்கங்களும் அதே போன்று தான். எங்கேயோ துவங்கி, எதிலோ முடிந்தது. எங்கள் சண்டைக்கு ஆதாரமே புரியாமல் என் பெண், மலங்க மலங்க விழித்தபடி இருந்தாள். கருத்துவேறுபாட்டின் பொழுது பேசுதல் மேலும் பிணக்கத்தை உண்டு பண்ணும் என்பது எங்கள் இருவரின் கருத்தும். அதனால் பேசாமலேயே வந்தோம். பக்தி மனநிலை பறந்தது. எரிச்சல் மேலிட, சுகபோதாநந்தா, 'எப்படி ஒற்றுமையாய் இருப்பது' என்று பேசிக் கொண்டிருந்த ஒலிநாடாவை பட்டென நிறுத்த மட்டும் முடிந்தது. கிரிவலம் ஏகத்துக்கு மௌன வலமாக மாறியது. தொலைப்பேசியில் என் அம்மாவிடம் பேசும்போது, காலையில் நடந்த தர்க்கம் நினைவில் வர, 'கிரிவலம் வந்தது ரொம்ப அமைதியா இருந்ததும்மா' என்று சொல்லி புன்னகைத்தேன்.


கனவா நனவா?


இரவு எத்தனை மணியானாலும் அன்று யோகி ராம்சூரத்குமார் ஆஸ்ரமம் சென்று விடுவது என்று முடிவு செய்திருந்தோம். இரவு எட்டு மணிக்கெல்லாம் நாங்கள் தங்கியிருந்த இடம், அமைதியாகி விடுகிறது. தெருவில் மனித நடமாட்டம் வெகுவாகக் குறைந்து விடுகிறது. ராம்சூரத்குமார் ஆஸ்ரமத்திற்கு முந்தைய தெருவில் 'சிவஷக்தி அம்மையார் ஆசிரமம்' என்ற பலகையைப் பார்த்து விட்டு அங்கும் செல்லலாமா என்று கேட்டு, கணவரின் முறைப்பைப் பரிசாய் பெற்றேன். 'இருக்கற ஆசிரமங்கள் போறும்' என்ற கறாரான பதிலுடன் வண்டியை ராம்சூரத்குமார் ஆஸ்ரமத்திற்கு முன் நிறுத்தினார். ஆசிரமக்கதவு மூடப்பட்டிருந்தது.சீக்கிரமே மூடிவிடுவார்கள் போலும் என்று முடிவு செய்து, வண்டியைத் திருப்பினோம். அப்போது முப்பத்தைந்து வயது மதிக்கத்தக்க ஒருவர் "ஆசிரமம் போகணமா, இது பின் பக்கம், அடுத்த தெருவிற்கு போங்க அங்க திறந்திருக்கும்" என்றார். நன்றி கூறிவிட்டு, வண்டியை ரிவேர்ஸ் எடுக்க அதிகபட்சம் ஒரு நிமிடம் ஆகியிருக்கும். அவர் அந்தத் தெருவில் எந்த வீட்டிலும் நுழைந்த அடையாளம் தெரியவில்லை. எல்லா வீட்டு கதவுகளும் மூடியிருந்தன. எந்த வீட்டின் கேட்டின் ஒலியும் கேட்கவில்லை. எந்த வீட்டுக் கதவின் ஒலியும் கேட்கவில்லை. அந்த நீளத் தெருவில் எங்குமே அவர் தென்படவும் இல்லை. சரியாய் ஒரே நிமிடத்தில் சத்தமின்றி எங்கே போனார்? அப்பொழுது தான் உறைத்தது. அவர் எந்த வீட்டின் கதவையும், கேட்டையும் திறந்து கொண்டு வந்ததாகவும் தெரியவில்லை. இதெல்லாம் அதிசயம் என்று என்னால் நம்ப முடியவில்லை. சத்தமில்லாமல் கேட்டைத் திறந்து ஏதோ ஒரு வீட்டின் வாசற்புறத்தில் நின்று கொண்டிருக்கக்கூடும் என்று தோன்றி, கண்ணை அகல விரித்து எல்லா வீடுகளையும் பார்த்தேன். யாரும் வந்து போன அடையாளங்கள் இல்லை. நம்ப முடியாததாக இருந்தாலும், அவர் ஏதோ ஒரு வீட்டில், மின்னல் வேகத்தில் நுழைந்து தாளிட்டுக்கொண்டிருப்பார் என்று தான் என் மனம் வாதிடுகிறது. என் கண்ணுக்கு சித்தரோ, இறைவனோ தோன்றும் அளவு நான் இன்னும் புண்ணியம் செய்திருக்கவில்லை என்பதும் ஒரு காரணமாய் இருக்கலாம்.


பயணம்


பயணங்களில் பிடித்தமான முதன்மையான விஷயம் என்னவென்றால் அது இலக்கையடைய நாம் பயணிக்கும் நேரம் தான்। வாழ்க்கைப்பயணம் முதல் சுற்றுலாப்பயணம் வரை, இலக்கை விட, பயணமே அதிக சுவாரஸ்யமானது। அடுத்த நாள் திருவண்ணாமலைப் பயணம் முடிந்து பெங்களூர் செல்லப் போகிறேன், என்ற வருத்தம் இருந்தாலும் நான்கு மணிநேரப் பயணத்தை எதிர்நோக்கியிருந்தேன். திருவண்ணாமலை வரும் பொழுது பாடிக்கொண்டு வந்த பாடல்களை மீண்டும் காற்றைக் கிழித்து கத்த வேண்டும். 'மனசே ரிலாக்ஸ் ப்ளீஸ்' சண்டை போடாமல் ரிலாக்ஸ்டாக கேட்க வேண்டும். மனம் முழுவதும் ஏகப்பட்ட கனவுகள். அன்று ரமணாஸ்ரமத்திலேயே உணவருந்தும் போது, 'நீங்கள் பெங்களூர் தானே செல்கிறீர்கள். இவரையும் அழைத்துச் செல்ல முடியுமா?' என்று அங்குள்ள அதிகாரி ஒருவர் கேட்க, 'ஹை ஐ அம் ரோலண்ட், கேன் ஐ ஜாயின் யூ இ·ப் யூ டோண்ட் மைண்ட்' என்று கேட்டுக்கொண்டு ஒரு வெளிநாட்டவர் நின்றிருந்தார். 'இல்லை நான் கத்திப் பாட வேண்டும். நீங்கள் வருவதில் ஆட்சேபம் உண்டு' என்றா சொல்ல முடியும்? 'மனித சேவையே மஹேசன் சேவை' என்று பலவாறாக மனதை சமாதானப் படுத்திக்கொண்டு, 'ஓ வித் ப்ளெஷர்' என்று அவருடன் பெங்களூர் பயணமானோம். பயணம் துவங்கிய பத்து பதினைந்து நிமிடங்கள் பேசிக்கொண்டே வந்தார். சுவாரஸ்யமாக இருந்தது. ஹாலெண்டிலிருந்து வருவதாகக் கூறினார். மனைவியும், மகனும் பிறகு இந்தியா வரவிருப்பதாய் தெரிவித்தார். பளிங்கு போன்ற சுருக்கமற்ற முகம். அழகான சிரிப்பு, நல்ல கம்பீரமான தோற்றம் அதற்கேற்ற உயரம், எங்கள் வயதொத்தவராய் இருக்கக் கூடும் என்று கணக்கிட்டு, 'உங்கள் மகனுக்கு என்ன வயதாகிறது? பள்ளிக்குச் செல்கிறானா?' என்றேன். 'ஓ அவனா, அவனுக்கு பத்து வயதில் மகள் இருக்கிறாள். எனக்கு இப்போது வயது எழுவது' என்றாரே பார்க்கலாம்! வெளிநாட்டு நடிகர்களும் நடிகைகளும் நாற்பது வயதிலும் எவ்வாறு கதாநாயக வேடம் பூண்டு நடிக்க முடிகிறது என்று இவரைப் போன்றவர்களைப் பார்த்தால் விளங்கக்க்கூடும். மரியாதைக்கு அரை மணி பேசிக்கொண்டிருந்து விட்டு, 'பழைய ஹிந்திப்பாட்டுகள் கேளுங்கள் ரொம்ப மெலோடியஸ் ஆக இருக்கும்' என்று நானே கூறி, முகேஷின் குரலையும், ர·பியின் குரலையும் காரில் தவழவிட்டேன். கூடவே என்னால் அலற முடியவில்லையே என்ற வருத்தம் மட்டும் மறையவில்லை.


முடித்து விடுவதாய் சொன்ன வேலைகளில் பத்து பர்சண்ட் கூட முடிக்காமல், தச்சர் அவரின் குடும்ப சகிதம் எங்கள் வீட்டில் சிரித்து புழங்கிக்கொண்டிருந்ததைக் கண்டதும் வருத்தம் கோபமாய் மாறியது। இருந்தாலும், "தச்சர் புண்ணியத்தால் திருவண்ணாமலை தரிசனம்" என்று எண்ணி அவரை கேள்விகேட்காமல் விட்டுவிட்டோம். அதன் பின் ஒரு மாதமாகியும் தொடர்ந்து கொண்டிருந்த வேலையுடன் அடிக்கடி வந்து போய்க்கொண்டு, எங்களின் ஆத்ம நண்பராகிவிட்டிருந்தார் தச்சர்.


[முடிந்தது]

April 01, 2009

திருவண்ணாமலை பயணக்கட்டுரை (பகுதி 4)



[தொடர்ச்சி...]

ஆ: யோகி ராம்சூரத்குமார் ஆசிரமம்

விசிறி சுவாமிகள் என்று சில வருடங்கள் முன்பு பிரபலமான இவரை பலருக்கு நினைவிருக்கலாம। 1918 ஆண்டு, டிசம்பர் மாதம் காசிக்கு அருகே பிறந்தார். சிறுவயது முதல் ஆன்மீக ஈடுபாடு கொண்டவராக இருந்து, பிற்காலத்தில் ரமண மஹரிஷியைத் தேடி தென்னிந்தியா வந்தார். தம் ஆயுள் முழுவதையும் ஆன்மீக விசாரத்திலும், பக்தியிலும், பக்தர்கள் குறை களைவதிலும் ஈடுபட்டு , 2001-ஆம் வருடம் திருவண்ணாமலையில் முக்தியடைந்தார்। செங்கம் சாலையிலிருந்து பிரிந்து சிறிதே தூரத்தில் விஸ்தாரமாக நிமிர்ந்து நிற்கிறது இவரது ஆஸ்ரமம்। தியான மண்டபம், கோவில் உட்பட எல்லாமே பூஞ்சோலைகளுக்கு மத்தியில் அமைந்திருக்கிறது.

ஏறக்குறைய இருபது ஆண்டுகளுக்கும் முன் கட்டப்பட்டிருந்தாலும் இன்றும் கோவிலையும் சுற்றுப்புறத்தையும் நன்றாகப் பாதுகாத்து வருகின்றனர். தியான மண்டபத்தில், நமக்குத் தெரிந்த பல ஆன்மீகவாதிகளின் புகைப்படங்கள் இருக்கின்றது. இரவு நேரமானதால் உடனே கோவிலுக்குச் சென்று புறப்பட வேண்டிய சூழ்நிலை. அதனால் தியான மண்டபத்தில் அதிக நேரம் செலவிட முடியவில்லை. கோவிலில் சிவலிங்க வழிபாடு நடக்கிறது. அதற்கு நேர் எதிரே, யோகியின் முழு உருவச்சிலை அமைத்திருக்கிறார்கள். கோவில் மண்டபம் மிகப்பெரியதாய் இருக்கிறது. நாங்கள் சென்ற பொழுது இருபது பேர் உட்கார்ந்து பஜனை செய்தவாறு, மங்கள ஹாரத்தியை தரிசித்த வண்ணமிருந்தனர்। பாய் அல்லது ஜமுக்காளாம் போடப்படுகிறது, அதில் பக்தர்கள் உட்கார்ந்தபடி இறைவனை தரிசிக்கின்றனர். மண்டபம் பெரியதாக இருப்பதால், இருபது பேர் உட்கார்ந்திருந்தது வெகு குறைவாய்த் தெரிந்தது.ஆசிரமம் முழுதும், பலகைகளில் மஹானின் போதனைகளை எழுதி வைத்துள்ளனர். அவை எல்லாம் இவர் எளிமையையும், அடக்கத்தையும் பறைசாற்றுகிறது. தன்னை 'பிச்சைக்காரன்' என்று சில இடங்களில் குறிப்பிடுகிறார். அவருடைய தந்தை என்று 'சிவனை'க் குறிப்பிடுகிறார். பலகைகள் எங்கும் 'த்வைத' தத்துவங்கள் தெரிந்தன. அத்வைதம் பற்றி அத்தனை கூறப்படவில்லை. பல கூற்றுக்களில் அவர் தந்தையாய் வரிக்கும் சிவனிடம் மிகுந்த பக்தி தென்படுகிறது.

"இந்த ஆஸ்ரமத்திற்கு வந்து போகும் பக்தர்கள் எல்லோரையும் என் தந்தை பார்த்துக் கொண்டிருக்கிறார்। இங்கு வந்த யாருமே வெறும் கையுடன் திரும்பிப் போக மாட்டார்கள்। அவர்கள் என் தந்தையின் அருளும், ஆசியும் அள்ளிச் செல்வார்கள். அவர்கள் வாழ்வில் அமைதியும், முன்னேற்றமும் அதிகரிக்கச் செய்வார்." என பொருள் பட ஒரு பலகை ஆஸ்ரம வாசலில் இருக்கிறது. விஞ்ஞானமா? மெய்ஞானமா? என்று வாய்கிழிய பேசும் எனக்கே இதைப் படித்ததும் ஆறுதலும், அமைதியும் சூழ்ந்துது.



அனுபவங்கள்



மூன்று நாட்களில் சில சுவாரஸ்யமான அல்லது மறக்க முடியாத அனுபவங்களும் சேர்ந்தது। ரமணாஸ்ரமத்தில் சரியாக காலை ஏழு மணிக்கு சிற்றுண்டி। சரியாக ஏழு மணிக்கு, குளித்துத் தயாராகி ஆஜாராக வேண்டும்। இல்லையேல் சிற்றூண்டியை எதிர்பார்க்க முடியாது. எங்கள்மகளை ஏழு மணிக்கு குளித்து தயாராகி இட்டுச் செல்வது என்பது சிரமாக இருந்ததால், காலைச் சிற்றுண்டியும், இரவுச் சாப்பாடும் வெளியே உண்ண நினைத்தோம். முதல் நாள் இரவே உணவுவிடுதியின் வேட்டையை ஆரம்பித்தோம்.நம் சென்னையை விடவும் ஏன் பெங்களூரை விடவும், தெருக்கள் மேடுபள்ளமின்றி நன்றாக போடப்பட்டிருந்தது. பல உணவு விடுதிகளின் வெளித் தோற்றங்கள் சாப்பிடத் தூண்டுவதாய் இல்லை. இரு முறை திருவண்ணாமலையின் முக்கியத் தெருக்களைத் சுற்றிக் களைத்த பிறகு 'சரவண பவன்- உயர்தர சைவ உணவகம்' என்ற பலகை கண்ணில் பட்டது.சரவண பவன் என்றால் உடனே நமக்கு சென்னை சரவணபவன் நினைவில் வந்துவிடுகிறது. எக்கச்சக்கமாய் கனவு வளர்த்த என் மனதை அடக்கி, இதற்கும் அதற்கும் பெயரளவு பொருத்தம் மட்டுமே என்று மூன்று முறை சொல்லிக் கொண்டு உள்ளே நுழைந்தேன். சுத்தமாக இருந்தது. அதாவது....நிஜமாகவே சுத்தமாக இருந்தது. எங்களைத் தவிர ஹோட்டலில் யாருமே இல்லை.இதனால் அங்கிருந்த ஐந்து சர்வர்கள், உணவு தயாரிக்கும் செஃப், கல்லாவில் பில் போடுபவர்கள், என கிட்டத்தட்ட எட்டு பேர் எங்கள் மேஜையைச் சுற்றி நின்று கொண்டனர். லேசாக அரைக்கண்ணில் பார்த்தால் ஒருவரின் வேட்டி கூட வெள்ளையாக இல்லை. கண்ணை இறுக்க மூடிக்கொண்டு, 'வேட்டிக்கும் சுத்தத்துக்கும் சம்மந்தமில்லை' தறிகெட்டு ஓடும் எண்ணத்தை, கட்டையால் அடித்து நிறுத்தினேன். இந்த சர்வர்களில் ஒருவர் பிராமணர் போலும். இதையெல்லாம் யாரும் பொருட்படுத்துவதில்லை என்பது அவருக்குப் புரியவில்ல. அவர் எங்களிடம், 'வாங்கோன்னா, சூடா தோசை இருக்கு, இட்லி இருக்கு, பணியாரம் இருக்கு, என்ன சாப்படறேள்?' என்றார். அவரின் பேசும் தொனியும், எரிச்சலூட்டியத. இப்படிப் பட்ட பேச்சு வழக்கு தற்போது யாருமே உபயோகிக்காத ஒன்று. மேலும், பொதுவிடத்தில் சாதிகளையும் பிரிவினைகளையும் நினைவுப்படுத்தும் வகையில் பேச்சு இருப்பது தேவையற்றது. அவரவர் சாதிக்காரர்கள் பேசிப் பரிமாறினால் இரண்டு இட்லி அதிகம் சாப்பிடுவோம் என கற்பனை செய்துகொள்கின்றனர்.

ஆர்டர் செய்த உணவை ஐந்தே நிமிடத்தில் சுடச்சுட கொண்டு வந்தனர்। உணவின் தரம் சொல்லி மாளாது। அத்தனை ருசி!!! இப்படிப்பட்ட சாதாரண உணவகத்தில் இப்பேற்பட்ட ருசி எதிர்பாராத ஒன்று। மீண்டும் எனக்கு பாடம் "Looks are deceptive"।

நாங்கள் பாதி சாப்பிட்டுக்கொண்டிருக்கையில் வேறொரு நபர் நுழைந்தார் அவரிடம் அதே சர்வர் "என்னப்பா என்ன சாப்படற? தோசை சூடா ஊத்த சொல்லவா? இல்லை வேற எதனாச்சும் வேணுமா?" என்றாரே பார்க்கலாம்! பொதுவிடத்தில் சாதி நினைவூட்டும் பேச்சுகளை 'மார்க்கெட்டிங் டெக்னீக்'கிற்காக உபயோகிக்கும் அவரை என்ன சொல்வது?

அடுத்த இரண்டு நாட்களும் விசுவாசமாய் அதே உணவகத்தில் எங்கள் தேவையை பூர்த்தி செய்துகொண்டோம். திடீரென அத்தனை சர்வர்களின் வேட்டிகளும் சற்றே சுத்தமாக இருந்தது மனபிரமையாக இருக்கலாம். ஆனால் கவனிப்பின் தரம் குறைந்தது. கடைசி நாளன்று, ஊசிப் போன தேங்காய்ச் சட்னியை பறிமாறும் அளவு சென்று விட்டது. நாங்கள் குறையைச் சுட்டிக் காட்டியவுடன், புதிதாய் அரைத்து, இரண்டே நிமிடத்தில் சாப்பிடக் கொடுத்து அதை ஈடுகட்டி விட்டது பாராட்டப் பட வேண்டிய விஷயம்.

(அடுத்து பகுதியில் நிறைவு)