June 09, 2017

வல்லமை படப்போட்டிகாக

வல்லமை படப்போட்டிகாக அனுப்பிய இரு கவிதை.


அடையாளங்கள்
__________________


மனமொத்த மணவாழ்க்கையின்
மொத்த அடையாளத்தை
மென்பாதங்கள் நோக
தனியொருத்தியாய் ஏனடி பாரம் சுமக்கிறாய்?
மெட்டியிரண்டை புருஷனுக்குப் பகிர்ந்து..
கொலுசு குலுங்க,
பழந்தமிழ் பண் பாடு.
சற்றே இலகுவாகி
இளைப்பாறிக்கொள்..
உன் தனித்துவத்தையும் 
சேர்த்தணியப் பழகிக்கொள்.

***********


படத்துக்காக இன்னொன்றும் எழுதினேன்.  முதலில் எழுதியது இன்னும் பிடித்தமானதாய் இருந்தது.


அளவோடு மிஞ்சினால் அம்ருதம்
__________________________________பெண்மையின் அடையாளம்
நளினத்தின் நகை வடிவம்
நடனத்தின் நாடி
மங்கலச் சின்னம்
ஆடவரை ஆட்டுவிக்கும் நட்டுவாங்க

ஆயிரம் காரணம் இருப்பினும்
இவர் சொன்னார் 
அவர் தந்தாரென
விரலுக்கு ஒன்றாய்
மாட்டிக்கொண்டு விழிக்காதே
இதுவே பெண்ணின்
எல்லையென அடங்காதே

சிக்கென அழகாய்
ஒற்றை விரலில்
பாங்காய் அணிந்து
டக்கென தாவிக் குதிக்கும்
சுதந்திரமும் ஒப்பிலா அழகு
அளவான அழகும் அளவிலா அழகே

*******


May 12, 2017


இயந்திர வாழ்வு

அலுப்பு
சலிப்பு
கசப்பு
வெறுப்பு
முகச் சுளிப்பு
மணமிலாப் பூக்களென
போட்டது போட்டபடி உதறி
சட்டென  துறவு பூண்டேன்
..
தனிமை
வெறுமை
வறுமை
சிறுமை
இம்மையில் கொடுமை
மறுமையின் நிலையாமை
...
எண்திசையிலும்
புறமும் உள்ளும்
புரட்டிப் புரட்டிப் போடும்
வெங்காய வாழ்க்கை

February 01, 2017

வேடிக்கை மனிதர்கள்

இருவரின் சம்பாஷணை  மூன்றாம் மனிதர்  பார்வைக்கு சுவாரஸ்யம். வெறும் பார்வையாளனாக ரசிக்கும் வரையில் சத்தம் கூட இனிமை தான்.

அன்றாடம் நடைபழகும் பூங்காவில் விதவிதமான சட்டை சுமந்த மனிதர்கள்.
சட்டையினுள்  ஒளிந்திருக்கும் மனித இயல்புகள் இன்னும் விசித்திரமானவை.

பெசியபடியே நடைபயின்று கொண்டிருந்த இருவரில் ஒருவர் மட்டும் நாட்டு நடப்பு, பொருளாதாரம், சமூகம் தொடங்கி ட்ரம்ப் முதல் சசிகலா  வரை அலசிக் கொண்டிருந்தார். மற்றொருவர் தலை நிமிராமல்  நடை தொடர்ந்து  கொண்டிருந்தார்.

"என்ன சார் சொல்லறீங்க, நான் சொல்றது சரி தானே" - அதிரவைக்கும் உயர் தொனியில் கேள்வி எழுப்பியவருக்கு பதிலுக்கு காத்திருக்க விருப்பமில்லை. "இல்லை! தவறு" எனச் சொல்வதற்கான சுதந்திரம் அளிக்க முன்வரவில்லை. சொல்லியிருந்தால் ஏற்கும் பக்குவத்திலும் இல்லை. தன் கருத்தை மற்றவர் அங்கீகரித்தாரா என கவனிக்கவுமில்லை.  மற்ற நண்பருக்கு இந்த விவாதத்தில் கருத்து வேறுபாடு இருந்தது  எளிதில் கணிக்க முடிந்தது.

பெண்கள் பகிரும் அலுவலக பிரச்சனைகள், மாமியார் மருமகள் அண்ணி ஒரகத்தி வேறுபாடுகள் எல்லாமே ஏறக்குறைய இதே வகை உரையாடல். ஒருவர் உணர்ச்சி மிகுதியில் பேசுவதும் மற்றொருவர் மௌனமாக தொடர்வதும் காலை நேர (காட்சிப்பிழைகள்) சுவாரஸ்யங்கள்.  

குறைந்த பட்சம் மற்றவர் கருத்தை காதில் வாங்கவும் பொறுமை, விருப்பம் இல்லாத வேடிக்கை மனிதர்கள்.


January 14, 2017

கோழியின் புலம்பல்
ஏர் உழும் மாட்டுக்கு
பொட்டும் பூவும் வச்சு
பொங்கல் படைச்சு
மறு நாள் பாலுக்கு
விட்டு வச்ச மனுசன்
முட்டையை முழுங்கியதும்
மிச்சமிருக்கும் எங்கள
கூறு போட்டு  பிரியாணியாக்கும்
வன்முறையிலிருந்து மீளவாவது
குட்டியிட்டு பால் சுரந்திருக்கலாம்.

மாரீசம்
________

உழவுக்கு பெயரளவில் வந்தனை செய்து
ஊரெங்கும் குப்பைக்கூளங்களை தூவி
விலையுயர்ந்த 'மால்களில்'
இடைத்தரகர்ளின் பணப்பை நிரப்பி
அரிசிப் பருப்பை அலுங்காமல் அள்ளி செல்லும் நமக்கு
கடைநிலை  விவசாயியைப் பற்றி
கவலை  கொள்ள நேரமில்லை.
()
ஜல்லிக்கட்டின் பாரம்பரியத்தை காப்பாற்ற துடித்தாலும்
குடும்பத்துடன் கிராமத்துக்கு குடிபெயர
கிடிக்கிப்பிடியாய் பல பிரச்சனைகள்.
()
பொங்கலிடும் ஒரு நாள் கூத்திற்கு
தெய்வமாய் பரிமளிக்கும் மாக்கள்.
()
இயற்கை உரமூற்றி
சோறும் நீரும் அள்ளி வழங்கும் ஆதவனுக்கு
நன்றி கூறும் பாசாங்கில்
பட்டையும் பகட்டையும் பறைசாற்றி
பொங்கிய அரிசியுடன் வெல்லம் திணித்து
நெய்வழிய பதமாய் உண்டு
செல்ஃபியுடன் கும்மியடிக்கும் மற்றுமொரு நாளை.....
நட்புறவுகளுடன் நேசங்கள் பரிமாறி
அளவளாவும் ஆறுதலுக்காக பொங்கி மகிழ்வோம்

September 20, 2016

இருபது மழைக்காலங்கள்ஒரு மழைக்காலத்துக் குடையின் கீழ்
பூத்த முதல் புன்னகை
வசந்த கால வரவேற்பறையில்
சிந்திய கனவுக் கோலங்கள்
வலிகளை கடந்து விட்டதாய்
இறுமாந்த நேரத்தில்
நீர்வீழ்ச்சியென நினைவுகள்
நிரம்பித் தெரித்தோடும்.
அன்று நீர்த்தூவி வாழ்த்திய மழை
பிரிந்த போது பெய்யவில்லை.
பிரிந்தவர் கூடுவதும்; கூடுபவர் பிரிவதுமாய்
சுழலும் வாழ்க்கை.
இருபது மழைக்காலங்கள்
வந்து சென்றன.
மறுபடியும் சந்தித்தால்
மழை பெய்யும்.
.
.
அதன் பின் ஓயாது.

September 17, 2016

புரட்டாசி சனிக்கிழமையும் - பெருமாளும்
பெரும்பாலும் இறைவனை சாக்கிட்டு, நாம் கும்மி அடித்து குதூகலிக்க ஒரு சந்தர்ப்பமாகவே,  திருவிழாவும், கோவிலுக்கு செல்லும் வழக்கமும் இருந்து வந்திருக்கிறது. அதற்கப்பால் கோவிகளில் இறை உணர்வு மேலிட ஜபம் தபத்தில் ஈடுபடுவோர் எண்ணிக்கை சற்று மெலிந்து காணப்படும்.

இன்றைக்கும் புரட்டாசி சனிக்கிழமை என்பதால்  கோவிலில் எள் சிந்த இடமில்லை. அடிக்கடி கோவிலில் வந்து குசலம் விசாரித்தால் தான் அன்பு என்று அர்த்தமில்லை. இறைவனை அகத்திலேயே இன்னும் சொல்லப்போனால் நம் அகமெனும் மனத்துள் தரிசிக்கலாம் என்று சொல்லியிருக்கிறார்கள்.

இருந்தாலும், எண்ணை, திரி, பூ பழம் சகிதம் வந்திருந்து, ஆரத்தி காண்பிக்கும் அரை க்ஷணத்தில் கன்னத்தில் போட்டுக் கொண்டதும், பக்கத்திலிருப்பவரிடம் வாய் நோக, விட்டு விஷயங்கள், தெரு சமாச்சாரங்கள், சமுகத்தின் சீர் கேடு அங்கலாய்ப்புகள் தொடங்கி, நடுவில் இரண்டு  நொடி தீர்த்தம் வாங்கி சேவித்து, இடையே என்ன பிரசாதம் என்று கண்களை மேய விட்டு, மீண்டும் தொடரும் கதைகள்.

நம் வீட்டுக்கு வந்த ஒருவன், நம்மை கண்டுகொள்ளாமல் இருந்தால் அஹங்காரம் தலைக்கேறி தாம் தூம் என்று குதிக்கும் நம்மை நினைத்து வெட்கப்படவேண்டும்.  இவ்வளவு உதாசீனத்தை புன்னகையுடன் ரசித்து கடாட்சித்து கொண்டிருக்கும் பெருமாளின் கருணைக்கு இணையே இல்லை.... 

இது போன்ற சந்தர்ப்பங்களில் வேறு சில வழக்கு முறைகளில் உள்ளபடி ஆலயங்களில் பேச்சு சுதந்திரத்தை வலுக்கட்டாயமாக குறைப்பது நல்லதோ என்று தோன்றுகிறது. 

இவ்வளவு ரணகளத்திலும் யாரையும் கண்டுகொள்ளாமல் ஹனுமான் சாலிஸா-வை உச்சஸ்தாயியில்  தப்பும் தவறுமாய்  சொல்லிக்கொண்டு அமர்ந்திருந்தவரை பாராட்டாமல் இருக்க முடியவில்லை. 

உபன்யாச சிடி ப்ரஹல்லாதனின் பக்தியை எடுத்துரைத்து கொண்டிருந்தது, இத்தனை ஜன அலறலில் கரைந்தே போனது.